பக்கம் எண் :

3

                     ஆக்கியோன்

3.



திருத்தகு சரித மாய்ந்து தேர்பவர் தமக்குச் சற்றும்
வருத்தமி லாது கொங்கு மண்டல சதகஞ் சொன்னான்
வரிக்குயில் கூவும் பிண்டி மரத்துமுக் குடைக்கீழ்நின்ற
கருத்தனைக் கருத்து ளுன்னுங் கார்மேகக் கவிஞன் றானே.

     (க-ரை) வரியையுடைய குயில்கள் கூவுகின்ற அசோகினடியில் மூன்று
குடைகள் நிழலைச்செய்ய வீற்றிருந்தருளும் அருக தேவனைச் சிந்தியாநின்ற
கார்மேகக் கவிஞன், கொங்கு மண்டலத்தின் சிறந்த சரிதங்களைத் தெரிந்து
கொள்வாருக்கு வருத்தம் நேராதபடி எளிதாகக் கொங்கு மண்டல சதகம்
என்னும் நூலைச் சொன்னான் என்பதாம்.

     மாவிலிருக்குங் குயிலை அசோகிலிருப்பதாகக் கூறப்பட்டது.
மாவும் அசோகும் மன்மதனுக்குக் கணையாக மலரைக் கொடுத்தலானும்,
மாதர்கள் மேனிக்கு அசோகந்தளிர் மாந்தளிரையே கூறுதலானும்
இவையிரண்டும் ஒருங்கே வசந்த காலத்தின் கண்ணே தளிர்விடுதலானும்
அக்காலத்திற்றளிரைக் கோதித்தின்றல் குயிலுக்கு இயற்கையாதலால்
இதனிடத்துக் தங்கியிருத்தல் கூறலாமென்க.

                       (மேற்)

முழாத்திரண் மொய்ம்மலர்த் தாமந் தாழ்ந்துமேல்
வழாத்திரு மலரெலா மலர்ந்து வண்டினங்
குழாத்தொடு மிரைகொளக் குளிர்ந்து கூங்குயில்
விழாக்கொள விரிந்தது வீரன் பிண்டியே.

                               (சிந்தாமணி)

                    பாயிர முற்றிற்று.

                         நூல்

                         நாடு

                   கட்டளைக்கலித்துறை

1.



பொற்பு மிகுகொங்கு நாடு செழித்திடப் பூமியெங்கும்
நற்பய னுற்றுச் சுகித்திடு மென்ன நவிற்றுபழஞ்
சொற்பெற வெல்லா வளமும் பொருந்திச் சுரபியொடு
வற்சக மோங்கி வளர்வதன் றோகொங்கு மண்டலமே.