1‘சதுரன் எழில்சோண சைலன் துதிப்பன்
மதுரமொழி அன்பர் மனமாம் - குதிரை திறை
கொண்டவனென் றேத்தும்குரைகழற்கால்
யானை திறை
கொண்டவனை என்மனத்தே கொண்டு’
என்பதில், ‘திறை’ இப்பொருள்
தருதலை ஓர்க.
மொழி - தமிழ்மொழி. அதன் சுவை
ஈர்த்து ஈர்த்து என்பையும் உருக்கும் தன்மையது.
இயற்கையோடிசைந்த இன்மொழி தமிழாகலான் அது,
செழியனையும் சென்னியையும் தனக்குத் திறையாகக்
கொண்டது.
‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்’ என்பது ஆன்றோ
வழக்காதலால் அவர்கள் இம்மொழிப் பண்பில்
ஈடுபட்டுத் தம் நெஞ்சைத் திறையாகக்
கொடுத்தனர். புகழேந்தியார் பாண்டி நாட்டினும்
சோழ நாட்டினும் வாழ்ந்தவராகலான், இவ்விருபெரு
வேந்தர்களை மட்டும் குறிப்பிட்டார்.
இப்பாடல், புகழேந்தியார் தம்மையே
பிறர்போல் மாந்திக் கூறியதாகக் கொள்ளுதல்
வேண்டும். ஒரு சிலர், இச் செய்யுள் ஒட்டக்கூத்தர்
பாடியதென்றும், கம்பர் பாடியதென்றும் கூறுவர்.
அக்கூற்றுக்கு யாதொரு அகச்சான்றும் புறச்சான்றும்
இல்லை. இவ்வாறே தேவார ஆசிரியர்களான திருஞான
சம்பந்தரும் சுந்தரரும் தேவார ஒவ்வொரு
பதிகத்திறுதியிலும் தம்மையே பிறர்போல்
வைத்துக் கூறுதல் காண்க.
சுவை முதிர்தல், எண்வகை
மெய்ப்பாட்டுணர்ச்சிகளான, நகை அழுகை இளிவரல்
மருட்கை அச்சம் பெருமிதம் உவகை வெகுளிகள்.
இதனைக் கற்றார் உடலில், இவ்வுணர்ச்சிகள்
தோன்றுமாறு உணர்ச்சி மிக்கதாக அமைத்தல்.
அன்னத்தைத் தமயந்திபால் தூதாக
அனுப்பிய நளன், அது சென்றவுடன் அதன் வருகையை
எதிர்பார்த்திருந்தான் ; வழி மேல் விழி வைத்து
ஏமாந்திருந்தான் ; அப்போது அவன் மனநிலை ஒரு
நிலை கொள்ளாது, ‘இந்நேரம் தமயந்திபால்
சென்றிருக்குமா ? இந்நேரம் அவளைக் கண்டிருக்குமா ?
இந்நேரம் நம் செய்தியைக் கூறியிருக்குமா ?
இந்நேரம் திரும்புதல் கூடுமா ?’ என்றென்றெல்லாம்
கூறிக் கூறி, அவன் வருந்திய அவலநிலை
1. சோணசைல மாலைக் காப்பு.
|