முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
[கலம்பகமாவது ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முறகூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டுறுப்புக்களும் பொருந்த மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை யென்னுமிவற்றைக் கொண்டு இடையே வெண்பா, கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடப் பெறும். இவ்வாறு பாடப்பெறும் இந்நூல் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடப்பெறும். இக்கலம்பகம் திருவெங்கையில் எழுந்தருளிய சிவபிரான் மீது இயற்றப்பட்ட படியால் நூறுபாடல்களைக் கொண்டது. கலம்பகத்திற்குரிய இலக்கணங்களும் சிறப்புக்களும் நன்கமைந்து விளங்குவது. கற்பார்க்குப் பெருமகிழ்ச்சியை அளிப்பது.]
காப்பு

நேரிசைவெண்பா
பொன்னுலவும் வெங்கைப் புனிதற் கடியேனும்
உன்னுங் கலம்பகப்பாட் டோதுகேன் - தன்னைநிகர்
முத்திதரு மன்னோன் முழுதருளி னாற்பூத்த
அத்திதனைக் கண்டவத னால்.
 
ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
சீர்பூத்த நிறைமதிமான் றிருக்கரங்கொண் டம்மதியை
ஏர்பூத்த சடாமௌலிக் கியையவீர்ந் தனையிருத்தி
மற்றையவோர் பகவுமணி மார்பகத்திற் கிடந்திமைப்பக்
கொற்றவநீ யிருங்கேழற் கோடெனப்பூண் டருளினைகொல்
பூம்புனலோ பொன்முடிக்கட் புல்லோநஞ் சுமிழெயிற்றுப்
பாம்பினமோ கண்டுனது பாணியின்மான் றாவுவதே.

இது ஆறடித்தரவு.
 

(காப்பு) பொன்-திருமகள், அழகு, செல்வம். முன்னும்-எண்ணும். அத்தி-ஆனைமுகக் கடவுள். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்