முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
17. சிவநாம மகிமை
[சிவநாமம் என்பது சிவபெருமானுடைய திருப்பெயர். அப்பெயர்களுளெல்லாஞ் சிறந்து விளங்குவது சிவம் என்பது. இப்பெயரை இரட்டித்துச் ‘சிவசிவ’ என்பர். இவ்வாறு ‘சிவசிவ’ என்பதன் பெருமை செப்புதற்கரியது. இப்பெயரின் பெருமையிற் சிறிது கூறுவதால் இது சிவநாமமகிமை என்று பெயர் பெற்றது. இது பத்துக் கலிவிருத்தப் பாடலையும் இறுதியில் ஒர் அறுசீர் விருத்தப் பாடலையுங் கொண்டது.]
கலிவிருத்தம்
வேத மாகமம் வேறும் பலப்பல
ஓதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே.
(1)
புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே.
(2)
நாக்கி னானு நயனங்க ளானுமிங்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.
(3)
சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே.
(4)
வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழ்வுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.
(5)

1. ஓதி-உரைத்து. தடுமாறன்மின்-தடுமாற்றத்தையடையாதீர்கள். சோதி-ஒளி. தீது-தீமை. 2. புல்லர்-இழிந்தவர்கள். போதகர்-அறிவுடையவர். நவை-குற்றம். செல்லல்-துன்பம். 3. நயனங்கள்-கண்கள். முயங்கிய-தேடியடைந்த. 4. சாந்தி ராயணம் முதலிய நோன்புகளால் தீராத தீவினையும் விரைவில் அழிந்து போகுமென்பது. 5.வல்லி-உமாதேவி. காணிய-காணும் பொருட்டு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்