முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
2. நால்வர் நான்மணி மாலை
[நான்மணிமாலை என்பது தொண்ணூற்றாறுவகை நூல்களுள் ஒன்று. வெண்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம், அகவல் என்னும் நான்கு பாக்களானும் அமைவது நான்மணிமாலை யாகும். இது நாற்பது பாடல்களால் முடிவுபெறும். இந்நான்மணிமாலை சைவ சமயாசாரியர்களாகிய நால்வர்மீதும் திருஞானசம்பந்தருக்கு வெண்பாவும், திருநாவுக்கரசருக்குக் கட்டளைக்கலித்துறையும் சுந்தரருக்கு விருத்தமும் திருவாதவூரடிகட்கு அகவற்பாவுமாக இயன்றதாகலின் நால்வர் நான் மணிமாலை என்று பெயர்பெற்றது. இவ்வரிய நூல் திருத்தொண்டர் புராணச் செய்திகளையும் சைவசமய நுண் கருத்துக்கள் பலவற்றையுந் தன்னகத்துக்கொண்டு விளங்குவது மட்டுமன்றி ‘இலக்கியச் சுவை, பக்திச்சுவை முதலிய பலசுவை நலன்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.]

காப்பு
எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போ தகத்தின் கழல்.
 
நேரிசை வெண்பா
பூவான் மலிமணிநீர்ப் பொய்கைக் கரையினியற்
பாவான் மொழிஞானப் பாலுண்டு - நாவால்
மறித்தெஞ் செவியமுதாய் வார்த்தபிரான் றண்டை
வெறித்தண் கமலமே வீடு.
(1)

எப்போதகத்தும்-எக்காலத்தின் கண்ணும். உள் ஏழாம் வேற்றுமையிடப் பொருளாருபு. இதய கமலமுமாம்; இதற்கு அகப்போது என மாறுக. வெளிக்குப் பகட்டாகக் கூறுவது பயன்றராது என்பதும், மனத்தின் கண் பன்முறை நினைந்து சிந்திப்பார்க்கே இடரொழித்துப் பயனுண்டாக்குவன் என்பதும் விளக்கவே ‘அகத்து நினைவார்க் கிடரில்லை’ என்றார் என்க. கழல் என்பது காலில் அணியும் ஒரு வகையணி. இது பகைவரைப் புறங்காட்டச் செய்யும் வீரர்கள் அணிவது. இதனால் மக்கட்கு வரும் இடராய பகையைத் தவறாமலொழிப்பன் என்பது பெறப்படும்,1. பொய்கை-பிரமதீர்த்தம். ஞானப் பாலுண்டு அதனைத் தாம்மொழிந்த இயற்பாவோடு சேர்த்து எமது செவிக்கமுதமாய்வார்த்த பிரான் என்க; ஆன் “தூங்குகையா னோங்குநடைய” என் புழிப்போல ஒடுவுருபின் பொருளது. இயற்பாவான் மொழிதல்-இயற்பாவாற் றுதிக்கப்படுதலுமாம். உண்டு மறித்து அமுதாக இயற்பாவால் வார்த்தபிரான் என்னலுமாம். ஆக்கம் உவமம். வெறித்தண் கமலம்-மணமுங் குளிர்ச்சியும் பொருந்திய தாமரை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்