முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
4. பழமலையந்தாதி
[அந்தாதி என்பதற்கு விளக்கம் முன்புகூறினாம் - நூறு பாடல்களைக் கொண்ட இக்கலித்துறையந்தாதி இந்நாளில் விருத்தாசலம் என்னும் வடமொழிப் பெயரால் வழங்கப்பெறும் திருமுது குன்றாகிய பழமலையில் எழுந்தருளிய பழமலைநாதர் மீது இயற்றப்பெற்றது. செம்பாகமான நடையில் அமைந்த இவ்வந்தாதி கற்பவர்கட்கு மேன்மேலுங் கல்வியில் விருப்பத்தையுண்டாக்கக் கூடியது. இலக்கியப் பயிற்சி செய்யத் தொடங்குவார் இவ்வந்தாதியை முதற்கண் கற்பது நெடுங்கால வழக்கமாக இருக்கிறது. தொடங்கிய மங்கலச் சொல்லாலேயே இறுதியையும் முடித்தல் அந்தாதிகளின் பெரும்பான்மை வழக்காதலின் இவ்வந்தாதியும் அவ்வாறு மண்டலித் தலைப்பெற்றுள்ளது.]
காப்பு
சீரதங் கோட்டு முனிகேட்ட நூற்படி செங்கரும்பால்
ஏரதங் கோட்டு வயல்சூழ் முதுகுன் றிறையவனைப்
பூரதங் கோட்டு மலையானைப் பாடப் புரந்தருளும்
பாரதங் கோட்டு நுதியா லெழுதிய பண்ணவனே.
 
நூல்
திருவருந் தங்க வருங்கல்வி மாது சிறப்புவருங்
கருவருந் தங்க நிலையாதென் றுள்ளங் கரைந்திறைஞ்சிற்
பொருவருந் தங்க மலைபோலுங் குன்றைப் புராதனனை
இருவருந் தங்க டலையா லிறைஞ்சு மிறைவனையே.
(1)
இறைக்கு வளையு மிளங்கிள் ளையுமழ கென்பவர்சேர்
துறைக்கு வளையு மெகினமும் வாவிக்குத் தூயவிதழ்
நறைக்கு வளையு மழகா முதுகிரி நாதர்க்கின்றிப்
பிறைக்கு வளையு முடல்வந்த வாறென்கொல் பேசுகவே.
(2)
பேசுக வீர வருநாளென் றொல்லைப் பெருங்கடல்சேர்
ஆசுக வீர பழமலை வாணவென் றன்பளைந்து
பூசுக வீர மதிவேணி நீற்றைப் புலவிர்பிறர்
காசுக வீர வனையுக வீர்மெய்க் கதிதருமே.
(3)
கதியிலை வேலை மடவார்க் கியற்றக் கருதுளமே
பொதியிலை வேலையுண் டுற்றோன் றொழும்பழம் பூதரத்தை
நுதியிலை வேலை மகிழ்வீரன் றந்தையை நோக்கிலைநீ
ஒதியிலை வேலை வளர்ப்பாய் தருவை யொடித்தெறிந்தே.
(4)
ஒடிய மருங்குலைக் கொங்கைகள் வாட்டுறு மோடரிக்கட்
டொடியம ருங்குலைக் காந்தளங் கைம்மகள் சோரமதன்
கடிய மருங்குலைத் தீப்போன் மதியங் கனன்றெழுதல்
அடிய மருங்குலைச் செய்ம்முது குன்றர்க் கறைகுவமே.
(5)

அதங்கோட்டுமுனி-முனிவர்களில் ஒருவர். கேட்டநூற்படி-கேட்ட தொல்காப்பிய இலக்கண நூன்முறைப்படி. பூரதம்-நிலமாகிய தேர். கோட்டு மலையானை-மகாமேருமலையை வில்லாக வளைத்தவரை. கோட்டு நுதியால்-கொம்பினது கூரினால். எழுதிய பண்ணவன்-ஆனை முகக்கடவுள்.1. திரு-திருமகள். கல்விமாது-கலைமகள். சிறப்பு-வீடுபேறு. கரு வருந்து அங்கம் நிலையாது-கருப்பத்திலே துன்பத்தையடைகின்ற இவ்வுடல் நிலையற்றது. பொருவு அரும்-ஒப்பில்லாத. புராதனன்-பழமலைநாதர். இருவரும்-திருமாலும் நான்முகனும். 2. இறைக்கு-கைகளுக்கு. வளை-வளையல். வளை-சங்கு. எகினம்-அன்னம். நறை குவளை-தேன் பொருந்திய செங்கழுநீர்.பழமலை நாதர்க்குவர வேண்டிய கூன் இளம்பிறைக்கு எவ்வாறு வந்தது என்றவாறு. 3. ஈர-அரிய. பெருங்கடல்-பாற்கடல். ஆசுக-அம்பையுடையவரே. ஒல்லைபேசுக-விரைவாகத் துதிப்பீர்களாக. அன்பு அளைந்து-அன்போடு கலந்து. உகவீர்-விரும்பாமல். 4. கதிஇலை-நற்கதிஇல்லை. வேலை-ஏவற்பணிகள். பொதியில்-பொதியமலை. வேலை-கடல். பழம்பூதரம்-பழமை பொருந்திய சிவபெருமான். நுதியில்-நுனியில். ஐ வேலை-நுண்மை வாய்ந்த வேற்படையை. தரு-கற்பகதரு. ஒதி-ஒதியமரம். 5. மருங்குல்-இடை. அரிக்கண்-செவ்வரிகளையுடைய கண். தொடி அமரும்-வளையல்கள் பொருந்திய. சோர-சோர்வடைய. மதன் கடிய-காமன் வருத்த. மருங்கு-பக்கம். உலை-கொல்லுலை. அடியம்-அடியேங்கள். குலைசெய்-கரைகள் செய்யப்பட்ட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்