முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
6. விருத்தகிரி பெரியநாயகியம்மை
நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தம்
[நெடுங்கழி நெடிலாசிரிய விருத்தமென்பது அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றையுங் கடந்து நீண்டிருத்தலின் இவ்வாறு பெயர் பெற்றது. இப்பெயர் பாவாற் பெற்ற பெயராம். பத்துப்பாடல்களால் அமைந்த இதனைப் ‘பெரியநாயகியம்மை பதிகம்’ என்றலுந் தகும். இப்பாடல்கள் விருத்தாசலம் என்னும் பழமலையில் எழுந்தருளிய பெரிய நாயகியம்மைமீது பாடப்பெற்றது. பாடல்கள் யாவும் ஒன்பது வகைச்சுவைகளும் ஒருங்கே பொருந்திக் கற்பவர்கட்குக் களிப்பையூட்டுவனவாகத் திகழ்கின்றன.]
முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன்
      முக்கணாண் டகைநின தெழில்கூர்
முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந் தடியின்
      முனைப்பிறைக் கோடுகொண் டுழுது
விழுமணி யரவ நுழைசடா டவியின்
      விண்ணதித் தண்புனல் விடுப்ப
விரைவொடு குளிர்ந்து முகமலர் தலினான்
      மென்கொடி யெனநினை யுணர்ந்தேன்
செழுமணி நீல மழைமுகி றவழுஞ்
      சிலம்பெனும் புற்றினின் றூர்ந்து
திரைபொரு கடற்பேர்ப் பெரும்படம் விரித்துத்
      தினமணி யெனப்படுஞ் செங்கேழ்
கெழுமணி யுமிழ்ந்து பேரிரு டுரந்து
      கிடக்குமெய்ம் முடக்குமா சுணமாய்க்
கிளர்மணி முத்த நதியுடை விருத்த
      கிரியமர் பெரியநா யகியே.
(1)

1. மணிமிடறு-நீலமணிபோலுங் கரிய கழுத்து. முகம்புலர்தல்-முகம் வாடுதல். ஊடறணியுமாறு தேவியைப் பெருமான் வணங்குங்கால் தேவி முகாம்புய மலர்தலின் அவரைக் கொடியாக உருவகஞ் செய்தார். முழுமணி-இலக்கண முற்றுமமைந்த நீலமணி. கனல்மழு-வினைத்தொகை; கனலும் மழுவும் என உம்மைத் தொகையுமாம். சிலம்பு-மலை. தினமணி-கதிரவன். மாசுணம் ஆய்-பெரும் பாம்பு போன்று. ஆதல்-உவமவுருபிடைச் சொல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்