|
17
17. உலகியலில் ஒருவர்க்கொருவர் உதவி செய்து வாழ்வது இயல்பாயுளது. உதவியும் ஓரோர் பயன்
கருதியே செய்யப்படுகிறது. பொருளோ புகழோ விரும்பி உதவுதல் பெரும்பான்மை. பயன் கருதாது செய்யும்
உதவி பாராட்டற்குரியதாயினும் அஃது ஏட்டளவில் தான் பெரிதும் காணப்படுகிறது. இறைவனுக்குச் செய்யும்
பணியும் அவ்வியல்பிற்றே என்று நினைக்கின்றார், வள்ளலார். இறைவனால் நமக்கும் பெரும் பயன்
உண்டு; நம்மால் இறைவனுக்கு யாது பயன்? அப்பயன் தானும்
இன்னதென்று தெரிந்தால்
அதனைக் கொடுத்து இறைவன் அன்பைப் பெறலாம் ; தெரியவில்லையே என்று சிந்திக்கின்றார். அச்
சிந்தனையில் தோன்றியது இப் பாட்டு .
1984. உன்னால் எனக்காவ துண்டதுநீ கண்டதுவே
என்னால் உனக்காவ தேதுளது - சொன்னால்யான்
தந்தார்வத் தோடும் தலைமேற்கொண் டுய்கிற்பேன்
எந்தாயிங் கொன்றுமறி யேன்.
உரை: எந்தையே, உன்னால் எனக்கு நலம் பல ஆவதுண்டு; அது நீ நன்கு கண்டது; அது மாத்திரமன்று; என்னால் உனக்கு ஆவது யாது உளது; இங்கு யான் ஒன்றும் அறியேனாதலால், சொல்லுதல் வேண்டும்; சொன்னால் அதனை யான் மிக்க ஆர்வமுடன் தந்து மேலும் பணிப்பதைத் தலைமேற்கொண்டு செய்து உய்திபெறுவேன். எ.று.
எல்லாம் வல்ல முதல்வனாதலால் உன்னால் எனக்கு அளவிறந்த நலமுண்டு என்பாராய், “உன்னால் எனக்கு ஆவதுமுண்டு” எனவும், “அது நீ கண்டது” எனவும் கூறுகின்றார். நினைக்கும் நெஞ்சமும், பேசும் வாயும், செயற்குரிய மெய்யும் இறைவன் தந்தவையாதலின், “அது நீ கண்டது” என்று உரைக்கின்றார். உயிர்களால் இறைவனுக்கு ஆவது ஒன்றும் இன்மையின், “என்னால் உனக்கு ஆவது ஏதுளது” என வினவுகின்றார். உலக வாழ்வும், வாழும் உடம்பும், பொருளும் பிறவும் யாவும் இறைவன் தந்தவையாதலை அறிகின்றமையின், அடியேன் உனக்குத் தரக்கூடியது ஒன்றுமில்லை என்றற்கு, “இங்கு ஒன்றும் அறியேன்” எனவும், தெரியச் சொன்னால் அதனைத் தருவேன் என்றற்கு, 'ஆர்வத் தோடும் தந்து' எனவும், என்னால் இயன்ற பணி ஏதேனும் உளதாயின் அதனைத் தலைமேற்கொண்டு செய்வேன் என்றற்குத் “தலைமேற் கொண்டு” எனவும், இவ்வாறு ஆர்வத்தோடு தருவதும், பணிதலைமேற் கொண்டு செய்வதும் எனக்கு உய்தி நல்கும் என்பாராய் “உய்கிற்பேன், எந்தாய்” எனவும் உரைக்கின்றார்.
இதனால், என்னாலாவ தொன்றினைச் சொன்னால் அதனைச் செய்து உய்தி பெறுவேன் என விண்ணப்பித்தவாறு.
|