|
3664. கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற்
கடையிலே கடல்இடையிலே
கடல்முதலி லேகடல் திரையிலே நுரையிலே
கடல்ஓசை அதன்நடுவிலே
வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட
வடிவிலே வண்ணம்அதிலே
மற்றதன் வளத்திலே உற்றபல சத்தியுள்
வயங்கிஅவை காக்கும் ஒளியே
புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே
புகுந்தறி வளித்தபொருளே
பொய்யாத செல்வமே நையாத கல்வியே
புடம்வைத் திடாதபொன்னே
மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே
மறுப்பிலா தருள்வள்ளலே
மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராசபதியே.
உரை: கரையிலாத கடலிலும், கடல் உப்பிலும், கடலின் நடு இடை முதலிலும், கடல் திரையிலும், அதன் நுரையிலும், அதன் ஓசையிலும், அதன் நடுவிலும், அளவில்லாத அதன் நீர்ப் பெருக்கத்திலும், அதன் வட்ட வடிவத்திலும், அதன் நீல வண்ணத்திலும், அதன் வளத்திலும் அமைந்துள்ள சத்திகள் பலவற்றுள் விளங்கி அவற்றைக் காத்தருளும் ஒளிப் பொருளே; குற்றமில்லாத ஒப்பற்ற தெய்வ மணியே; என் உள்ளத்தில் புகுந்து, அறிவு தந்தருளும் பரம்பொருளே; பொய் படாத செல்வமே; மறந்து கெடாத கல்வியே; புடம் வைக்கப் படாத பொன் போன்றவனே; கெடுதலில்லாத வாழ்வே; படைக்கப்படாத சேமநிதியே; மறுத்தலின்றி யாவர்க்கும் வழங்கும் அருள் வள்ளலே; மணிகள் வைத்திழைத்த தில்லைச் சிற்றம்பலத்தின் நடுநின்று திகழ்கின்ற ஒன்றாகிய தெய்வமே; எல்லாவற்றையும் செய்ய வல்ல நடராச மூர்த்தியே வணக்கம். எ.று.
கடலுக்குக் கரையில்லை என்பது பற்றிக் “கரையிலாக் கடலிலே” என்று சொல்லுகின்றார். கடலும் இடமாதல் பற்றி அதற்கு முதல், இடை, கடை, என்ற நிலைகளை மொழிகின்றார். கடலின் திரையும் நுரையும் முழக்கமும் இயல்பாதலின் திரை நுரை முதலியவற்றை எடுத்தோதுகின்றார். கடல் நீர் அளவிட முடியாததாகலின், “வரையிலா வெள்ளப் பெருக்கம்” என்று குறிக்கின்றார். கடலின் வடிவம் வட்டமாகவும் நீல நிறமுடையதாகவும் இருத்தலால், “வட்ட வடிவிலே வண்ணம் அதிலே” என வகுத்துரைக்கின்றார். முத்தும் மணியும் உண்டாதலும், மீன் முதலிய அளவற்ற உயிர்கள் நிறைந்திருப்பது பற்றிக் கடல் வளத்தை, முறையாக மொழிகின்றார். அவை ஒவ்வொன்றின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் சிவத்தின் பல்வேறு அருட் சத்திகள் நிற்றலாலும் அவற்றைச் சிவத்தின் பரவொளிதாங்கி நிற்றல் பற்றி, “உற்ற பல சத்தியுள் வயங்கி அவை காக்கும் ஒளியே” எனப் புகழ்கின்றார். மணிகட்குக் குற்றம் உண்டாதல் இயல்பாதலின், அது இல்லாத தூய தெய்வமணி எனச் சிவத்தைப் பாராட்டுதல் தோன்ற, “புரையிலா ஒரு தெய்வ மணியே” என்றும், உள்ளத்திற்குள்ளே உயிர்க்குயிரா யிருந்து மெய்யறிவளித்தலின், “உள்ளே புகுந்து அறிவளித்த பொருளே” என்றும் உரைக்கின்றார். ஒருகால் இருந்து ஒருகால் மறைந்தோடும் உலகியல் செல்வத்தின் மேம்படுத்தற்கு, “பொய்யாத செல்வமே” எனவும், மறதியால் கெடுதல் இல்லாத கல்வியறிவு என்றற்கு, “நையாத கல்வியே” எனவும் கூறுகின்றார். சிவனது திருமேனி மாற்றில்லாத பொன் போன்றதாகலின், “புடம் வைத்திடாத பொன்னே” எனப் போற்றுகின்றார். மறைதல் இல்லாத வாழ்வு என்றற்கு எதுகை நோக்கி, “மரையிலா வாழ்வே” என்று உரைக்கின்றார். வைப்புப் பொருள் பிறர் அறியாவாறு மறைக்கப்பட்டிருத்தலின் அதனின் வேறுபடுத்த, “மறைப்பிலா வைப்பே” என்கின்றார். வேண்டுவார் வேண்டுவதை நல்கும் பெரு வள்ளலாதலால், “மறுப்பிலாத அருள் வள்ளலே” எனச் சிறப்பிக்கின்றார். மணிமன்று என்றது தில்லைப் பொன்னம்பலத்துப் பொற்சபை.
இதனால், கடலின் பல்வேறு கூறுகளில் நின்று, வயங்கும் சத்திகளைக் காத்தருளும் ஒளியும், தெய்வ மணியும், அறிவளித்த பொருளும், செல்வமும், மல்லியும், பொன்னும், வாழ்வும், வைப்பும், வள்ளலுமாகிய தெய்வம், எல்லாம் வல்ல நடராசப் பெருமான் என்பதாம். (14)
|