பக்கம் எண் :

4687.

          கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி
          கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக் கொண்டிக் குவலயத்தே
          தொண்டே திருஅம் பலந்தனக் காக்கிச் சுகஅமுதம்
          உண்டேன் உயிர்தழைத் தோங்குகின் றேன்உள் உவப்புறவே.

உரை:

     அருட்பெருஞ் சோதியை என் கண்களால் கண்டேன்; கண்டதனால் உவகை மிகுந்து சிவானந்தக் கூத்தாடிக்கொண்டு இவ்வுலகில் யான் செய்யக் கூடிய தொண்டனைத்தையும் ஞான சபைக்கே உரிமையாக்கி ஞானானுபவமாகிய அமுதத்தை உண்டு உள்ளம் களிக்க உயிர் தளிர்த்து ஓங்குகின்றேன். எ.று.

     ஞானக் கண் கொண்டு அருட்பெருஞ் சோதியைத் தெளிவுறக் கண்டமை விளங்க, “அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டேன்” என்று கூறுகின்றார். இனி இதற்கு என் இரண்டு கண்களாலும் நேரே விளங்கக் கண்டேன் என மொழிகின்றார் எனினும் பொருந்தும். அருட்பெருஞ் சோதியைக் கண்டதனால் தாம் பெற்ற இன்பத்தைக் “களி கொண்டேன்” எனப் பராவுகின்றார். சிவனாந்தக் கூத்தாடினேன் என்பாராய், “களி கொண்டேன் சிவானந்தக் கூத்தாடிக்கொண்டு” என்றும், நிலவுலகில் தாம் செய்யக் கூடிய சிவத்தொண்டு அனைத்தும் சிவத்துக்கே உரியதாக்கினமை தோன்ற, “குவலயத்தே தொண்டு திருவம்பலம் தனக்காக்கி” என்று கூறுகின்றார். களி - மகிழ்ச்சி. குவலயம் - நிலவுலகம். தொண்டு - சிவத்துக்கும் உயிர்களுக்கும் செய்யும் நற்பணி. சுக அமுதம் - அருட்பெருஞ் சோதியின் காட்சி அனுபவானந்தத்தைச் சுக அமுதம் என்று சொல்லுகின்றார். உவகை மிகுதியால் உயிரும் உடலும் இன்பப் பூரிப் பெய்தியதை, “உள் உவப்புற உயிர் தழைத்து ஓங்குகின்றேன்” என வுரைக்கின்றார்.

     (5)