4688. உறவே எனதின் னுயிரேஎன் உள்ளத்தில் உற்றினிக்கும்
நறவே அருட்பெருஞ் சோதிமன் றோங்கு நடத்தரசே
இறவேன் எனத்துணி வெய்திடச் செய்தனை என்னைஇனி
மறவேல் அடிச்சிறி யேன்ஒரு போது மறக்கினுமே.
உரை: எனக்கு உறவும் என்னுடைய இனிய உயிரும் என் உள்ளத்தில் ஊறி இனிக்கும் தேன் போன்றவனும் அருட்பெருஞ் சோதியும் அம்பலத்தில் விளங்குகின்ற கூத்தரசனுமாகிய பெருமானே! நான் சாக மாட்டேன் என எனக்குத் துணிவு உண்டாகும்படிச் செய்தாயாதலால், அடியவனாகிய நான் ஒருகால் நின்னை மறந்தாலும் என்னை இனிச் சிறிதேனும் மறவாமல் ஆண்டருளுவாயாக. எ.று.
தாயாய்த் தலையளித்தும் தந்தையாய் ஞானம் வழங்கியும் அருள் புரிவதால், “உறவே” என்று சொல்லுகின்றார். சிந்திக்கும் தோறும் சிந்தையில் தேனூறி நின்று இனிமை செய்வதால், “என் உள்ளத்தில் உற்று இனிக்கும் நறவே” என்று போற்றுகின்றார். அம்பலவாணனுடைய ஆடல் படைத்தல் முதலிய ஐவகைத் தொழிலும் இனிது நடைபெற நிகழ்வாதலால் அப்பெருமானை, “மன்றோங்கு நடத்தரசே” என்று பாராட்டுகின்றார். அவனது அருட்பெருஞ் சோதி ஞானத்தால் தனக்குச் சாவில்லை யென்ற துணிவு ஏற்பட்டமையின் அதனைப் புலப்படுத்தற்கு, “இறவேன் எனத் துணிவெய்திடச் செய்தனை” என்று விளம்புகின்றார். மறப்பதும் நினைப்பதும் மக்கள் உயிர்க்கு இயல்பாதலின், “அடிச் சிறியேன் ஒருபோது மறக்கினும்” என வுரைக்கின்றார். அடியார்களில் தனது மிக்க சிறுமையைக் குறித்தற்கு, “அடிச் சிறியேன்” எனக் குறிக்கின்றார். மறத்தலும் நினைத்தலும் ஆகிய குறைபாடே இல்லாத பரிபூரணனாதலின் சிவனை நோக்கி, “என்னை இனி மறவேல்” என மக்கட் பண்பு பற்றி வேண்டுகிறார். (6)
|