பக்கம் எண் :

4690.

          சுடரே அருட்பெருஞ் சோதிய னேபெண் சுகத்தைமிக்க
          விடரே எனினும் விடுவர்எந் தாய்நினை விட்டயல்ஒன்
          றடரேன் அரைக்கண மும்பிரிந் தாற்றலன் ஆணைகண்டாய்
          இடரே தவிர்த்தெனக் கெல்லா நலமும்இங் கீந்தவனே.

உரை:

     செழுஞ் சுடராகியவனே! அருட்பெருஞ் சோதியை உடையவனே! எனக்கு வரும் துன்பங்களைப் போக்கி இவ்வுலகில் எனக்கு எல்லா நலன்களையும் தந்தவனே! விடர்களாயினும் பெண்ணிடத்துப் பெறும் இன்பத்தைக் கைவிட்டாலும் விடுவர்; யானோ எந்தையாகிய நின்னை விட்டு வேறு ஒன்றையும் நெருங்க மாட்டேன்; அரைக்கண நேரமும் உன்னைப் பிரிந்திருக்க மாட்டேன்; இது யான் செய்யும் ஆணை. எ.று.

     விடர் - காளைப் பருவமுடைய ஆண்மக்கள். பெண் சுகம் - பெண் இன்பம். அடர்தல் - இங்கே விரும்புதல் குறித்தது. இடராயின வெல்லாம் போக்கிக் கவலையற்ற நல்வாழ்வு பெற்று மகிழ்கின்றமை தோன்ற, “இடரே தவிர்த்து எனக்கு எல்லா நலனும் ஈந்தவனே” என்று இயம்புகின்றார்.

     (8)