பக்கம் எண் :

4691.

          தவநேய மும்சுத்த சன்மார்க்க நேயமும் சத்தியமாம்
          சிவநேய மும்தந்தென் உள்ளம் தெளியத் தெளித்தனையே
          நவநேய மன்றில் அருட்பெருஞ் சோதியை நாடிநின்ற
          இவனே அவன்எனக் கொள்வார்உன் அன்பர் இருநிலத்தே.

உரை:

     தவநெறியிலும் சுத்த சன்மார்க்கத்திலும் உண்மைப் பொருளாகிய சிவத்தின்பாலும் எனக்கு அன்பு தோற்றுவித்து என் உள்ளம் தெளியும்படியாக விளக்குவித்தாயாதலால், இனி இவ்வுலகத்தில் என்னைப் பார்க்கும் உன் அன்பர்கள் புதுமை பொருந்திய அம்பலத்தாடும் இறைவனது அருட்பெருஞ் சோதியை விரும்பி நின்ற இவனே சிவமாகிய அவன் என்று கருதிக் கொள்வார்கள்; இதனினும் பேறு வேறில்லை யன்றோ. எ.று.

     நேயம் - பற்று. முக்குண வயத்தால் சுகதுக்க மோகங்களால் மயங்குவது உள்ளத்துக்கு இயல்பாதலின், “உள்ளம் தெளியத் தெளித்தனை” என்று செப்புகின்றார். தெளிவித்தல் - தெளித்தல் என வந்தது. நவநேய மன்று - புதுமை பொலிகின்ற ஞான சபை. சிவமாம் தன்மை எய்திய அவன் சிவபெருமானால் ஏற்றுக் கொள்ளப்படுவதிலும் அவனுடைய அடியார்களால் சிவம் என ஏற்றுக் கொள்ளப்படுவது சிறப்பென்று சிவநெறி கூறுவதால், “அவன் எனக் கொள்வார் உன் அன்பர் இருநிலத்தே” என்று இசைக்கின்றார். இருநிலம் - பெரிய இம்

     (9)