பக்கம் எண் :

4693.

          நிதியே என்னுள்ள நிறைவே பொதுவில் நிறைந்தசிவ
          பதியே அருட்பெருஞ் சோதிய னேஅம் பலம்விளங்கும்
          கதியேஎன் கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்துகொண்ட
          மதியே அமுத மழையேநின் பேரருள் வாழியவே.

உரை:

     செல்வனே! என் உள்ளம் நிறைந்த நிறைபொருளே! அம்பலத்தில் நிறைந்து விளங்குகின்ற சிவபதியே! அருட்பெருஞ் சோதியை உடையவனே! பொன்னம்பலத்தில் பொருந்தி விளங்கும் சிவமூர்த்தியே! என் கண்ணும் மனமும் இன்புறுமாறு என்னுள் கலந்து கொண்ட அமுத சந்திரனே! அருளமுதம் பொழியும் மழை மேகமே! நின்னுடைய பெரிய திருவருள் வாழ்க. எ.று.

     உள்ள நிறைவினும் அமைதி தருவது வேறு ஒன்றுமில்லையாதலால் சிவத்தை, “என் உள்ள நிறைவே” என்று போற்றுகின்றார். சிவபதி - சிவபெருமானாகிய பதிப்பொருள், கதி, மூர்த்தமாதலின் அம்பலவாணனை, “அம்பலம் விளங்கும் கதி” என்று விளம்புகின்றார். யோகிகட்கு அவர்களுடைய கண்ணும் மனமும் கண்டு களிக்க அமுத சந்திரனாய்க் காட்சி தருவதால், “கண்ணும் கருத்தும் களிக்கக் கலந்து கொண்ட மதியே” என்றும், உபசாந்தத்தில் சிவயோகிகட்கு அமுதத்தைப் பொழிதலின், “அமுத மழையே” என்றும் துதிக்கின்றார்.

     (11)