பக்கம் எண் :

4695.

          மன்னிய நின்அருள் ஆரமு தம்தந்து வாழ்வித்துநான்
          உன்னிய உன்னிய எல்லாம் உதவிஎன் உள்ளத்திலே
          தன்இயல் ஆகிக் கலந்தித் தருணம் தயவுசெய்தாய்
          துன்னிய நின்அருள் வாழ்க அருட்பெருஞ் சோதியனே!

உரை:

     அருட் பெருஞ் சோதியையுடைய ஆண்டவனே! நிலை பெற்ற நினது திருவருளாகிய அருமையான ஞானாமுதத்தை எனக்குத் தந்து என்னையும் நின் திருவருளில் வாழ்வித்து நான் எண்ணிய எல்லாவற்றையும் எய்த உதவி என் உள்ளத்தின்கண் சிவமாய்க் கலந்து இப்பொழுது எனக்கு நினதருளைச் செய்தாய்; என்னையடைந்த நினது திருவருள் வாழ்க. எ.று.

     மன்னுதல் - நிலைபெறுதல். உன்னிய உன்னிய எல்லாம் உதவல் - எண்ணிய எல்லாம் எண்ணியாங்கு உதவுதல். உள்ளத்தில் ஞானமாய்க் கலந்து கொள்ளுதல் சிவத்தின் இயல்பாதலால், “என் உள்ளத்திலே தன்னியலாகிக் கலந்து தயவு செய்தாய்” என வுரைக்கின்றார். தயவு - அருள். துன்னுதல் - அடைதல்.

     (13)