பக்கம் எண் :

4701.

          மான்முதலா உள்ள வழக்கெல்லாம் தீர்த்தருளித்
          தான்முதலாய் என்னுளமே சார்ந்தமர்ந்தான் - தேன்முதலாத்
          தித்திக்கும் பண்டமெலாம் சேர்த்தாங்கென் சிந்தைதனில்
          தித்திக்கும் அம்பலத்தான் தேர்ந்து.

உரை:

     தேன் முதலிய தித்திக்கும் பொருட்கள் எல்லாம் சேர்ந்ததுபோல் என் சிந்தையில் அமர்ந்து என் சிந்தையைத் தேர்ந்து கொண்டு அதன்கண் எழுந்தருளி இனிக்கின்ற அம்பலவாணனாகிய சிவபெருமான், மூலப்பகுதி முதலாக வுள்ள தத்துவ வழக்கெல்லாம் நீங்கி என்னைத் தெளிவித்து, தானே முதற் பொருளாய் என் உள்ளத்தே அடைந்து எழுந்தருளுகின்றான். எ.று.

     மான் என்பது மூலப்பகுதியாகிய தத்துவத்தைக் குறிக்கும். அதன் காரியமாகிய ஆன்ம தத்துவங்களும் அதற்கு மேலுள்ள வித்தியா தத்துவங்களும் சுத்த தத்துவங்களும் ஆகிய எல்லாம் அடங்க, “மான் முதலா வுள்ள வழக்கெல்லாம்” என்று கூறுகின்றார். தேன் முதலாத் தித்திக்கும் பண்டங்கள், தேனும் கனி வகைகளும் பிற இனிப்புப் பொருட்களும் கோடல் வேண்டி, “தேன் முதலாத் தித்திக்கும் பண்டமெலாம்” என்று செப்புகின்றார். சேர்ந்தாங்கு - ஒருங்கு சேர்ந்தது போல. அமருமிடம் உள்ளமாயினும் சிந்திக்கும் சிந்தையில் தேனூற விளங்குதலின், “சிந்தைகளில் தித்திக்கும் அம்பலத்தான்” என்று கூறுகின்றார்.

     (6)