|
563. வன்குலஞ் சேர்கடன் மாமுதல் வேர்அற மாட்டிவண்மை
நன்குலஞ் சேர்வின் நகர்அளித் தோய்அன்று நண்ணிஎன்னை
நின்குலஞ் சேர்த்தனை இன்று விடேல்உளம் நேர்ந்துகொண்டு
பின்குலம் பேசுகின் றாரும்உண் டோஇப் பெருநிலத்தே.
உரை: கடலின் கண் வலியவர்களாகிய அசுரர் குலத்தைச் சேர்ந்த சூரவன்மாவாகிய மாமரத்தை வேரோடு வெட்டி மாய்த்து, வளம் மிக்க நற்குலத்தாரான தேவர்கள் வாழும் விண்ணகரத்தைக் காத்தளித்த பெருமானே, அந்நாள் என் சிந்தையிற் புகுந்து நின் திருவடியை நினைப்போர் கூட்டத்தில் என்னைச் சேர்த்துக் கொண்ட நீ, இந்நாளில் கைவிடலாகாது; மனமுவந்து ஏற்றுக் கொண்ட பின் குலம் குணம் பேசுவது இப்பெரிய உலகத்தில் எங்கும் கிடையாது அன்றோ? எ. று.
வன்குலம் சேர் மாமுதல் என இயையும், வன்குலம்-வன்செயலே புரியும் அசுரர் குலம். சூரவன்மா, கடலகத்தே மாமரமாக நின்றான் எனப்படுதலின், “கடன் மாமுதல்” என்று கூறுகின்றார். “பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” (முருகு) என நக்கீரர் கூறுமாறு காண்க. மாட்டுதல்-வெட்டி வீழ்த்துதல். நன்குலம் என்றது ஈண்டுத் தேவர்கள் இனத்தை. அசுரர் கைப்பற்றியிருந்த தேவர் உலகை மீட்டுத் தேவர்கட்கே தந்தமையின், “விண்ணகர் அளித்தோய்” என்று சொல்லுகிறார். அந்நாள் என்றது முருகப் பெருமானைச் சிந்திக்கத் தொடங்கிய நாள். நின்குலம் என்றவிடத்துக் குலம் கூட்டத்தில் மேல் நின்றது. நின்கோயிலுக்கு வரச் செய்தனை என்றுமாம். உளம் நேர்தலாவது, மனமிசைதல், குலம் பேசுவதாவது, குலநலமும் குணநலமும் ஆராய்வது, இது திருமணக் காலங்களில் நிகழ்வது, ஒரு பெண்ணை மணந்து கொண்ட பிறகு குலநலம் பேசுவது இழுக்கென்ற கருத்தில், “கொண்டு குலம் பேசலாகாது” என்றொரு பழமொழி நாட்டில் நிலவுகின்றது. கொள்வதற்கு முன்புதான் குலமும் குணமும் பேசுவது இயல்பு என்பது விளங்க, “குணம் பேசிக் குலம்பேசிக் கோதில் சீர்ப் புகழனார் பணங் கொள் அரவகலல்குல் பைந்தொடியை மணநேர்ந்தார்” (நாவுக்) எனச் சேக்கிழாரும் கூறுமாறு காண்க. இதை நினைவிற் கொண்டே, “உளம் நேர்ந்து கொண்டு பின் குலம் பேசுகின்றாரும் உண்டோ இப்பெரு நிலத்தே” என்று கூறுகின்றார். (14)
|