151

      151. சிவபெருமான் திருவடியைத் தம் தலையால் தீண்டல் வேண்டுமென்ற ஆசை திருநாவுக்கரசர்க்கு மிக்கெழுந்தது. அப் பெருமானே தன் திருவடியைச் சென்னிமேல் வைத்தாலல்லது தீண்டற்கு வேறு வழியில்லை என எண்ணிய நாவுக்கரசர் திருச்சத்தி முற்றத்தில் சிவனை வழிபட்டபோது, தமது முதுமையை நினைந்து, “பெருமானே, அடியேனைக் கூற்றம் குமைப்பதன்முன் நின் பூவார் திருவடியை என் தலைமேல் வைத்தல் வேண்டுமென இறைஞ்சினார். “நல்லூர்க்கு வருக” எனச் சிவபிரான் அவர் கனவில் தோன்றியுரைத்தலும், நல்லூர் அணைந்தார் நாவரசர். அத் திருப்பதியில் பெருமானை அவர் வணங்கி எழுகையில் திருவடி சூட்டப்பட்டது; இதனைச் சேக்கிழார் பெருமான்,

 

     “நன்மைபெரு கருள்நெறியே

           வந்த ணைந்து நல்லூ ரில்

     மன்னுதிருத் தொண்டனார்

           வணங்கிமகிழ்ந் தெழும்பொழுதில்

     உன்னுடைய நினைப்பதனை

           முடிக்கின்றோம் என்றவர்தம்

     சென்னிமிசைப் பாதமலர்

           சூட்டினான் சிவபெருமான்”

 

என வாய் குளிரப் பாடுகின்றார். திருநாவுக்கரசர் மனம் மகிழ்ச்சியால் உடலும் உள்ளமும் ஒப்பக் குளிர்ந்து, “நினைந்துருகு மடியாரை நையவைத்தார்” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடினார். பாடினவர், பாட்டுத்தோறும், திருவடி சூட்டிய சிறப்பை.

 

    “இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி

    நனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்

    நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே”

    “நன்னலத்த திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நாடேறு திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நல்லருளால் திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நண்ணரிய திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நற்றவர் சேர் திருவடிஎன் தலைமேல் வைத்தார்”

    “நாறுமலர்த் திருவடிஎன் தலைமேல் வைத்தார்”

    “நலங்கிளரும் திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நன்றருளும் திருவடி என் தலைமேல் வைத்தார்”

    “நாம் பரவும் திருவடி என் தலைமேல் வைத்தார்”

 

என்று பாடினார். இத் தாண்டகத்துள் ஊடுருவிப் பெருகித் தோன்றும் நாவரசரின் பெருமகிழ்ச்சியைக் கண்ட சேக்கிழார்,

 

     “அருள் நினைந்துருகி விழுந்தெழுந்து

     நிறைந்துருகி மலர்ந்தொழியாத

     தவம் பெரிதும் பெற்றுவந்த

     வறியோன்போல் மனம் தழைத்தார்”

 

என்று மொழிந்து மகிழ்கின்றார்.

 

      இந்த இனிய நிகழ்ச்சியில் வடலூர் வள்ளலின் திருவுள்ளம் ஈடுபடுகின்றது. தமது முடிமேலும் அத் திருவடி பட்டதுபோலும் உணர்ச்சி பொங்கிக் குளிர்விக்கின்றது. அஃதோர் இனிய பாட்டாய் மலர்கின்றது.

2321.

     துடிவைத்த செங்கை அரசேநல்
          லூரில்நின் தூமலர்ப்பொன்
     அடிவைத்த போதெங்கள் அப்பர்தம்
          சென்னி யதுகுளிர்ந்தெப்
     படிவைத்த தோஇன்ப மியான்எணுந்
          தோறும்இப் பாவிக்குமால்
     குடிவைத்த புன்தலை ஒன்றோ
          மனமும் குளிர்கின்றதே.

உரை:

     துடியேந்தும் செங்கையை யுடைய சிவபெருமானே, நல்லூரில் நாவரசர் முடிமேல் நின் பொன்னடியை வைத்தபோது, அது குளிர்ந்து எப்படி இன்பம் பெருகுவித்ததோ? அதை அடியேன் நினைக்கும்போது, என் புல்லிய தலையேயன்றி, மனமெல்லாம் குளிர்ந்து இன்பம் செய்கின்றது எ.று.

     சிவபெருமான் திருவடிவில் ஒரு கையில் துடியும், ஒரு கையில் மானும் காணப்படுதலால், “துடிவைத்த செங்கையரசே” என்று போற்றுகின்றார். தாருகவனத்து முனிவர் சிவனுக்கெதிராக விடுத்த மந்திரமெல்லாம் திரண்டு ஒரு துடியாகிச் “செறிதரு புவனமெல்லாம் செவிடுற ஒலித்தது” அச்சுறுத்த, அதனைச் சிவன் தன் கையிற் பற்றிக்கொண்டான் எனத் துடியின் வரலாற்றைத் ததீசி முனிவர் உரைக்கின்றார். நல்லூரில் சிவனது திருவடி தனது முடிமேற் பட்டதும், எய்திய இன்பக் குளிர்ச்சியை, “இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி, நனைந்தனைய திருவடி” என நாவுக்கரசர் உரைப்பது பற்றி, “அப்பர் தம் சென்னியது குளிர்ந்து எப்படி இன்பம் வைத்ததோ” என வுரைக்கின்றார். அவ்வின்பம் இப்படியிருந்ததென யான் அறியேனாயினும், அதனை நினைக்கும் போது மனமும் உடலும் குளிர்கின்றன என்பாராய், “தலையொன்றோ மனமும் குளிர்கின்றது” என வுரைக்கின்றார். நாவரசரின் திருமுடியை நினைந்த நினைவுடன், தமது தலையை நினைத்து அருவருப்படையும் வள்ளலார், “மால் குடிவைத்த புன்றலை” என இகழ்கின்றார். வெயில் மழை காற்றுப்படின் மயக்கமெய்துவித்தும், வியர்வையால் தீநாற்ற முற்றும் இகழ்வெய்துவதுபற்றி “மால் குடிவைத்த புன்தலை” என்று கூறுகிறார். மால் - மயக்கம்; குடிவைத்தல் - நெடிதிருத்தல். இறைவன் திருவடி தீண்டும் திருவும் சிறப்பும் இல்லாமை நினைந்து இங்ஙனம் கூறுகின்றார் எனினும் அமைவதாம்.

     இதனால், இறைவன் திருவடிப்பேற்றில் ஈடுபட்டெய்தும் இன்பம் சொல்லித் திருவருளை நாடி முறையிடுவது இப்பாட்டின் பயனாதல் காண்க.

     (151)