பக்கம் எண் :

New Page 1

158

             காப்புப் பருவம்

        மேனாள் அகிலம் தரமெல் லியலா
        ஆனா அருள்தன் னைஅளித் தொருபால்
        தானா கஇருத் தியதற் பரனை
        நானா மயல்செய் வதுநன் றிதுவே

என்று கூறியுள்ளான்.

    இறைவன் அகங்காரம் அற்றவன்.  அவனுக்கு இத் தத்துவம் இருந்தால் பிட்டுக்கு மண் சுமந்திரான் ;  பரவை யாரிடம் தூதுபோய் இரான்.  ஆகவே, அவன் நீர் அகங்காரி.  இறைவன் தேவர்கள் பொருட்டு நஞ்சை ஆகாரமாகக் கொண்டவன்.    “ அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்டவன். “  என்று அப்பரும்,  “ உலகுய்யகாரின் மல்கு கடல் நஞ்மது உண்ட கடவுள் “  வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மால்விடம் தான்அமுது செய்து அருள் புரிந்த சிவன் “  எனச் சம்பந்தரும்,  “ விடம் சுட வந்தமரர் தொழ அங்கு அலக்கண் தீர்த்து அவ்விடம் உண்டு, உகந்த அம்மான் “  எனச் சுந்தரரும் இறைவன் விடத்தை உண்டதைக் குறித்துள்ளனர்.  ஆகவே, அவன்காரி ஆகாரி.  சிவபெருமான் வேதங்கள் காண்டற் கரியன்.   “ எதிர் மறை எட்டும்தோறும் வஞ்சனாய் அகல்வான். “   “  வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளி “  எனப் பரஞ்சோதியாரும், “ ஆர் அறிவார் என்று அனந்த மறை ஓலமிடும் பேர் அறிவே இன்பப் பெருக்கே பராபரமே “  எனத் தாயுமானவரும் கூறுதலை அறியவும்.  இறைவன் பிரணவ வடிவினன்.  இதனைத் திருமுறைகளில் வரும் தொடர்களால் நன்கு உணரலாம்.   “ ஒங்காரத்துள் பொருளாய் உள்ளான், ஓங்காரத் துருவாகி நின்றானை “ “ உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா “  என வருதல் காண்க.  திருமந்திரத்தில்,

    ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
    ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்
    ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன
    ஓங்கார சீவ பரசிவ ரூபமே

எனக் கூறப்பட்டு உள்ளதையும் அறியவும்.  ஆகவே, அவன் ஓங்காரி.