பக்கம் எண் :

New Page 1

162

             காப்புப் பருவம்

    “ வழிஎனப் படுவது அதன்வழித் தாகும் “ 

என்றும் கூறினார்.

    இந்த அளவிலும் தொல்காப்பியர் நின்றிலர்.  வழிநூல் நான்கு வகையில் அமைக்கப்படும் என்பதை,  “ வழியின் நெறியே நால்வகைத் தாகும் “  என்று கூறி அந்நால்வகைகள்,

    தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து
    அதர்ப்பட யாத்தலோ டனைமர பினவே

என்றும் எடுத்துக் காட்டினர்.

    இந்நூற்பாவின் இலக்கணப்படி அமைந்தனவே, சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பிகள் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியும், சேக்கிழார் பாடிய பெரிய புராணமும் ஆகும்.  சேக்கிழாரே தமது நூலுக்குத் தொகை நூல், வகை நூல் எவை என்பதை,

    மற்றி தற்குப் பதிகம்வன் தொண்டர்தாம்
    புற்றி டத்தெம் புராணர் அருளினால்
    சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகைஎனப்
    பெற்ற நற்பதி கம்தொழப் பெற்றதால்

என்றும்,

    அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
    நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
    புந்தி ஆரப் புகன்ற வகையினால்
    வந்த வாறு வழாமல் இயம்புவாம்

என்றும் பாடியுள்ளார்.

    இதனால் சுந்தரர் நூல் தொகை என்பதும், நம்பியாண்டார் நம்பிகள் நூல் வகை என்பதும், சேக்கிழார் நூல் விரிநூல் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க.  இது கொண்டே, “ தொண்டர் வரலாற்று விரி “ என்றனர்.