பக்கம் எண் :

மூ

186

             காப்புப் பருவம்

    மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக் கப்பால்
        முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்
    நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையில் கூறும்
        நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
    பூவேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
        புதியமதி நதிஇதழி பொருந்த வைத்த
    சேவேந்து வெல்கொடியான் அடிச்சார்ந் தாரும்
        செப்பியஅப் பாலும்அடிச் சார்ந்தார் தாமே

என்று கூறினார்.  ஆனால், நம்பி ஆண்டார் நம்பிகள், அவர்களைச் சிவகணத்தார் என்றும், சுந்தரர் குறிப்பிட்ட அடியார்கட்குப்பின் சந்திர சேகரப் பெருமான் திருவடியுற்றாரும் என்று கூறியுள்ளனர்.  இதனை  “ நாவலூர் மன்னவன் தொகையில் பிறைசூடி பெய் கழற்கே ஒருக்கும் மனத்தொடு அப்பால் அடிச்சார்ந்தார் “  என்றும்,  “ தெரிக்கும் அவன் சிவன் பால் கணத்தோர் “  என்றும் கூறியிருத்தலைக் காணவும்.

    சேக்கிழார் தமிழ் நாட்டில், சைவ சமயத்தைச் சார்ந்தவர்களையும், சுந்தரருக்குப்பின் இறை அன்பில் ஈடுபட்டு அவன் திருவடியில் புகுந்தவர்களையும் மட்டும் குறிப்பிட்டிலர்.  தமிழ் நாட்டுக்குப் புறம்பே எந்நாட்டில் பிறந்தவர்களாயினும், எம்மதத்தினராயினும் இறைவனடியில் அன்பு கொண்டு இணைந்தவர்கள் யாவரையும் அப்பால் அடிச் சார்ந்தார் என்றே குறிப்பிட்டுச் சென்றார்.  இது கருதியே இறைவரைப் பொதுச் சொல்லால் முதல்வனார் என்றும், மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமையோர் என்றும் கூறிய அடிகளை ஊன்றிப் பார்க்கவும். பிறமதத்தவர்கட்கும் சிவபெருமானே முதல்வன் என்பது எவரும் ஒப்பமுடிந்த முடிபாகும்.  தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்றனர் மணிமொழியார்.

   விரிவிலா அறிவி னோர்கள் வேறொரு சமயம் செய்து
   எரிவினால் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும்