பக்கம் எண் :

 

       செங்கீரைப் பருவம்

217

அருள் கலந்த கோவணம் வைக்கப்பட்ட போது,  தராசுத்   தட்டுச்   சரிநிகராக  இன்றித் தாழ்ந்து காட்டி நிற்க, அமர்நீதியார் தட்டு உயர்ந்து நின்ற போது சேக்கிழார் பெருமானார், இவ்வாறான நிலைக்கு விளக்கம் தருவார் போல,

    முட்டில் அன்பர்தம் அன்பிடும் தட்டுக்கும் முதல்வர்
    மட்டும் நின்றதட்டு அருளொரு தாழ்வுறு வழக்கால்
    பட்டோடு துகில்அ னேக கோடிகள் இடும்பத்தர்
    தட்டு மேம்படத் தாழ்ந்தது கோவணத்தட்டு

என்று பாடி இருப்பதன் உட்பொருளைக் கூர்ந்து நோக்குகையில், தொண்டர்களின் அன்புக்கு நிகராக இறைவன் அருள் நிற்காமல் தாழ்ந்து அவர்கள் திருவுளக் கருத்தை நிறைவேற்றி வைக்கும் என்பதை நன்கு உணரலாம்.  இதனையே ஈண்டு ஒப்பரிய தொண்டர் என்ற தொடர் விளக்கி நிற்கிறது.

    தொண்டர்கள் அருமையினும் அருமையானவர்.  அதனால்தான் அவர்களைத் தெய்வமாகவே கொண்டு பெரிய முனிவர்களும் தொழுது வந்தனர்.  இதற்குச் சான்றாகப் பெருமிழலைக் குறும்பர் எனும் பரமயோகியார் சுந்தரரைத் தெய்வமாகக் கொண்டு பூசித்ததை உதாரணமாகக் காட்டலாம்.  இங்ஙனம் தொழுது வந்தார் என்பதை,

        மையார் தடங்கள் பரவையார்
            மணவா ளன்தன் மலர்க்கழல்கள்
        கையால் தொழுது வாயவாழ்த்தி
            மனத்தால் நினைக்கும் கடப்பாட்டில்
        செய்யாள் கோனும் நான்முகனும்
            அறியாச் செம்பொன் தாளிணைக்கீழ்
        உய்வான்சேர உற்றநெறி இதுவே
            என்றன் பினில்உய்த்தார்

என்ற சேக்கிழார் பாடலால் காணலாம்.  துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை இன்னமும் விளக்கமுற,