பக்கம் எண் :

என

354

       சப்பாணிப் பருவம

 

என்று சட்டம் வகுத்துக் கூறினர்.  இங்ஙனம் இருக்கப் பரமதத்தன் பலரும் அறிய அம்மையார் காலில் விழுந்தது பொருத்தமற்ற தன்றோ? இதனை அம்மையார் ஏற்பரோ? ஆகவே, அம்மையார் அதனை ஏற்காது ஒதுங்கி நின்ற நிலையினையும், அவனது செயலை ஏற்காது மருண்டு மருண்டு நோக்கிய நிலையினையும் சேக்கிழார் எத்துணை நுண்ணறிவுத் திறனால் நுவன்றுள்ளார் என்பதை, “மானிளம்பிணைபோல் நின்ற மனைவியார்”  என்றும், “கணவர் தாம் வணங்கக் கண்ட காமர்பூங்கொடியனாரும்” என்று உவமை கூறித் தெளிவுபடு்த்தியதிலிருந்து தெளியவாம் அன்றோ.”

    பரமதத்தனை அம்மையார் அதுவரையில் தம் அருமைக் கணவராக எண்ணி இருந்தனர்.  பின் அவனது செயல்களைக் கண்டு அவனை, வெறுத்தமையினைக் காட்டுவதைக் கூறவந்த சேக்கிழார், அம்மையார் வாக்கில் இரு முறை பரமதத்தனை ‘இவன்’ என்று ஒருமைச் சொல்லால் வழங்குமாறு செய்த நுண்ணறிவுத் திறனையும் ஈண்டு உணர்தல் வேண்டும்.  இதனை,

    ஈங்கிவன் குறித்தகொள்கை இதுஇனி இவனுக்காகத்
    தாங்கிய வனப்புநின்ற தசைப்பொதி இதுகழித்து

என்ற அடிகளில் காணலாம்.  அடுத்தாற்போல் மற்றும் ஓர் எடுத்துக் காட்டினையும் காட்டி நிறுத்துவோமாக.

    அனபாயச் சோழன் தன் அவையில் கூடியிருந்த புலவர்களிடையே, ‘மலையில் பெரிது, கடலில் பெரிது, உலகில் பெரிது எது’ என்ற வினாக்களை எழுப்பினன்.  இவ்வினாக்களுக்கு எவரும் விடை இறுத்திலர். அதுபோது அவன் உள்ளத்தில் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்னும் அடி நினைவுக்குவரத் தொண்டை நாட்டு மன்னனுக்கு எழுதி அவ்வினாக்களுக்குரிய விடைகளை அறிஞர்கள் வழி அறிந்து அனுப்புமாறு விடுத்தனன்.  தொண்டை நாட்டு மன்னன் சேக்கிழாரிடம் கொடுத்து விடை காணுமாறு வேண்ட, அருண்மொழித் தேவர் உடனே தட்டுத் தடையின்றி,