“ஆகவே சேக்கிழார்” விலக்கு விலகக் கவிபாடவல்லவர் என்பது தேற்றம்.
விதிகளைத் தழுவிப்
பாடிய கவிகள் பெரிய புராணத்தில் பலவுண்டு: திருமணத்திற்குமுன் பலவிதிகளை மேற்கொள்ளுதல் மரபாகும்.
இதனைத் தடுத்தாட்கொண்ட புராணத்தும் காணலாம். “குலமுதல் அறிவில் மிக்கோர் கோத்திர முறையும்
தேர்ந்து” என்பதும், “குறித்து நாள் ஓலைவிட்டார்” என்பதும், “நீள் முளை சாத்தினார்கள்” என்பதும்,
“பணைமுரசு இயம்ப வாழ்த்திப் பைம்பொன் நாண்காப்புச் சேர்த்தார்” என்பதும், மற்றும் பல செய்திகளும்
பாடப் பட்டு இருத்தல் “விதிதழுவி” பாடப்பட்டமைக்கு ஏற்ற சான்றாகும். விதிதழுவிப் பாடவல்லவர்
என்பதைத் தாமே “மாமறை விதிவழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றி” என்று கூறு மாற்றாலும் தெளியலாம்.
சேக்கிழார்
பெருமானார் பெரியபுராணம் பட மூல இலக்கியங்களாக உள்ளவை, திருமுறைகள். இந்தத் திருமுறைகளில்
காணும் கருத்துக்களுக்கு முரணாகாதவாறு கவிபாடும் திறமை சேக்கிழார் பெற்றுள்ளார். சுந்தரர் தம்
திருத்தொண்டத் தொகையில் திருநீலகண்டரைப் பாடும்போது, “திருநீலகண்டத்துக் குயவனார்க்கு
அடியேன்” என்று குலத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதற்கு இணங்கச் சேக்கிழார் “வேட்கோவர் குலத்துவந்தார்”
என்றும், சுந்தரர் “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்” என்பதற்கு விளக்கம் கூறுபவர்போல்,
“மெய்த்தவ வேடமே மெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்” என்றும், காரைக்கால் அம்மையார் தமது
அற்புதத் திருவந்தாதியில்,
பெறினும் பிறிதியாதும்
வேண்டேம் நமக்கீ
துறினும் உறாதொழியு
மேனும் - சிறிதுணர்த்தி
மற்றொருகண் நெற்றிமேல்
வைத்தான்தன் பேயாய
நற்கணத்தில் ஒன்றாய
நாம்
என்று பாடியிருப்பதை அறிந்து,