அடியார்கள் அல்லும்
பகலும் தொண்டு செய்தவர்கள் என்பதைத் தொண்டர் புராணத்தில் பரக்கக் காணலாம். திண்ணனார்
இரவு முழுதும் கண் விழித்திருந்து புரிந்த தொண்டு இன்னது என்பதை,
அவ்வழி அந்திமாலை
அணைதலும் இரவு
சேரும்
வெவ்விலங் குளஎன்
றஞ்சி
மெய்ம்மையின்
வேறு கொள்ளாச்
செவ்விய அன்பு தாங்கித்
திருக்கையில்
சிலையும் தாங்கி
மைவ்வரை என்ன
ஐயர்
மருங்குநின்
றகலா நின்றார்
என்ற பாடலால் தெரியலாம்.
“கருங்கடல் என்ன நின்று கண்துயிலாத வீரர்” என்றும் கூறி இருப்பதையும் காண்க.
பகல்போதும் தொண்டினையே
சிறப்பாகக் கொண்டு செய்ததைச் சிறுத்தொண்டர் வரலாற்றில் பகற்போதில் அடியாரைத் தேடிச்
சென்ற நிலையினைத் தொண்டர் சீர் பரவுவார்.
அம்பலவர் அடியாரை
அமுதுசெய்விப் பார்இற்றைக்
கெம்பெருமான் யாவரையும்
கண்டிலர்தே டிப்போனார்
வம்பெனநீர் எழுந்தருளி
வருந்திருவே டங்கண்டால்
தம்பெரிய பேறென்றே
மிகமகிழ்வர் இனித்தாழார்
என்று பாடியுள்ளனர்.
இவற்றால் அடியவர்கள்
அரனார் அருள் பெறும் நிலையில் அல்லும் பகலும் தொண்டு செய்தமை காண்க.
சேக்கிழார்
பெருமானார்தம் கவி, கனிவுதரும் கவி. அக்கவிகளைக் கானத்துடன் இசைக்கும்கால் கல்லும் கரையும்.
இதனைப் பல்வேறு இடத்துக் காணக் கூடுமாயினும், பரவையார் விரகதாபத்தால் வாய்விண்டு பாடியதைப்
படித்தாலே போதுமானது.