பக்கம் எண் :

72

             காப்புப் பருவம்

    ஒரு செட்டிப் பெண் தன் காதலன் பாம்பு கடித்து இறந்ததால் வாய்விட்டு அரற்றியதைக் கேட்ட திருஞான சம்பந்தர் இறைவனிடம்,

    சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்
    விடையாய் எனுமால் வெருவா விழுமால்
    மடையார் குவளை மலரும் மருகல்
    உடையாய் தகுமோ இவள்உள் மெலியே

என்று முறையிட்டு, இறந்தவனை எழுப்பித் தந்தார்.  இதனைக் குன்றைக் கோமகனார்,

    மற்றிவனும் வாளரவு தீண்ட மாண்டான்
        மறிகடலில் கலம்கவிழ்த்தார் போல நின்றேன்
    சுற்றத்தார் எனவந்து தோன்றி என்பால்
        துயரம்எலாம் நீங்கஅருள் செய்தீர் என்னக்
    கற்றவர்கள் தொழுதேத்தும் காழி வேந்தர்
        கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப்
    பற்றியவாள் அரவுவிடம் தீரு மாறு
        பணைமருகல் பெருமானைப் பாடல் உற்றார்.

என்று பாடிக் காட்டினார்

    சுந்தரரது அருள் குணத்திற்கும் சான்று உண்டு.  மடுவில் குளித்த சிறுவனை முதலை விழுங்கியதால் துன்புற்ற பெற்றோரைக் கண்டு அவர்கள் இன்புறும் வண்ணம்,

    உரைப்பார் உரைஉகந் துள்கவல்
        லார்தங்கள் உச்சியாய்
    அரைக்கா டரவா ஆதியும்
        அந்தமும் ஆயினாய்
    புரைக்கா டுசோலைப் புக்கொளி
        யூர்அவி நாசியே
    கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச்
        சொல்லுகா லனையே

என்று பரமனை வேண்டி எழுப்பித்தந்தனர்.  இதற்கு அடிப்படைக் காரணம் அருளே என்பதை உட்கொண்ட சேக்கிழார் பெருமானார்.