11 முதல் 20 வரை
 
11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம்

(பதவுரை) வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் -ஆசாரமானது, ஓதலின் - (வேதம்) ஓதலினும், நன்றே- நல்லது.

(பொழிப்புரை) பிராமணருக்கு வேதம் ஓதுவதைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்தது.

   
12. ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.

   
13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு

(பதவுரை) அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமற் சம்பாதி.

(பொழிப்புரை) தானியத்தையும் திரவியத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடிக்கொள்.

   
14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை

(பதவுரை) கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம்.

(பொழிப்புரை) மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமையாம்.

   
15. காவ றானே பாவையர்க் கழகு

(பதவுரை) காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும்.

   
16. கிட்டா தாயின் வெட்டென மற

(பதவுரை) கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே, மற - (அப்பொருளை) மறந்துவிடு.

(பொழிப்புரை) நீ விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால், சீக்கிரத்தில் அதனை மறந்துவிடு.

   
17. கீழோ ராயினுந் தாழ வுரை

(பதவுரை) கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்) பேசு.

(பொழிப்புரை) தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மையாகப் பேசு.

   
18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை

(பதவுரை) குற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை.

(பொழிப்புரை) குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார் என்பதாம்.)

   
19. கூரம் பாயினும் வீரியம் பேசேல்

(பதவுரை) கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே.

(பொழிப்புரை) உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும், உன் வீரத்தை வியந்து பேசாதே.

   
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்

(பதவுரை) கெடுவது - தீமையை, செய்யின் - (தன் சிநேகன்)செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - நற்செய்கையாம்.

(பொழிப்புரை) தன் நண்பன் தீமையைச் செய்தால், அவனது நட்பை விட்டுவிடுவது நற்செய்கையாம்.