முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
21 முதல் 30 வரை
|
|
-
21. இல்லா
ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே
யாமாயின்-இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமேல்
அவ்வில் புலிகிடந்த தூறாய்
விடும்.
(பதவுரை)
இல்லாள் அகத்து இருக்க - (நற்குண நற்செய்கைகளையுடைய) மனையாள்
வீட்டில் இருக்கின், இல்லாதது ஒன்று இல்லை - (அவ் வீட்டில்)
இல்லாத பொருள் ஒன்றுமில்லை, இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின் -
மனையாள் இல்லாமற் போயினும், இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்கு
மேல் - மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொல்லினும், அவ்
வில் புலி கிடந்த தூறு ஆய் விடும் - அவ் வீடு புலி தங்கிய புதர்போல்
ஆய்விடும்.
ஆம்: அசை.
நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும்
வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு; அஃதல்லா வீடு யாவரும் கிட்டுதற்கரிய
காடேயாகும் எ - ம். (21) |
|
|
|
|
-
22. எழுதியவா
றேகாண் இரங்குமட நெஞ்சே கருதியவா றாமோ
கருமம்-கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக்
காஞ்சிரங்காயீந்ததேல் முற்பவத்திற் செய்த
வினை.
(பதவுரை)
இரங்கும் மடம் நெஞ்சே - வருந்துகின்ற அறியாமை பொருந்திய மனமே,
கருதிப்போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்கு - (நல்ல பயனைப்
பெறலாமென்று) நினைத்துப் போய்க் கற்பகத்தருவை அடைந்தவர்க்கு,
காஞ்சிரங்காய் ஈந்ததேல் - (அது) எட்டிக்காயைக் கொடுத்ததாயின்,
முற்பவத்தில் செய்த வினை - (அதற்குக் காரணம் அவர்)
முற்பிறப்பிற் செய்த தீவினையாகும்; கருமம் கருதியவாறு ஆமோ -
செய்தொழில்கள் (நீ) நினைத்தபடியே ஆகுமோ, எழுதியவாறே காண் -
(கடவுள்) விதித்தபடியே ஆகும் என்று அறிவாயாக.
செய்தொழில்கள் ஊழின்படி யன்றி அவரவர்
நினைத்தபடி முடியா எ - ம். (22) |
|
|
|
|
நல்லார் சினமும் பொல்லார்
சினமும் |
-
23. கற்பிளவோ
டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும்
போல்வாரே-விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
[பிடித்து சீரொழுகு சான்றோர்
சினம்.
(பதவுரை)
கயவர் - கீழோர்,
கடுஞ்சினத்து-கடுங்கோபத்தால் வேறுபட்டால், கல் பிளவோடு
ஒப்பர் - கல்லின் பிளவு போல் திரும்பக்கூடார்; பொன்பிளவோடு
ஒப்பாரும் போல்வார் - (அப்படி வேறுபட்டபோது) பொன்னின் பிளவோடு
ஒப்பாவாரும் ஒப்பாவர்; [ஒருவர் கூட்டக் கூடுவர்.] சீர் ஒழுகு சான்றோர்
சினம் - சிறப்பு மிக்க பெரியோருடைய கோபம்; வில்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறும்-வில்லைப் பிடித்து (அம்பினாலே) நீர்
பிளக்க எய்த பிளவுபோல (அப்போதே) நீங்கும்.
ஏ இரண்டும் அசை.
கோபத்தினால் வேறுபட்டவிடத்துக் கடையாயார்
எக்காலத்துங் கூடார்; இடையாயார் ஒருவர் கூட்டக் கூடுவர்; தலையாயார் பிரிந்த
அப்பொழுதே கூடுவர் எ - ம். (23) |
|
|
|
|
-
24. நற்றா
மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல் கற்றாரைக்
கற்றாரே காமுறுவர்-கற்பிலா [போல் மூர்க்கரை மூர்க்கர்
முகப்பர் முதுகாட்டிற் காக்கை உகக்கும்
பிணம்.
(பதவுரை)
கயத்தின் - குளத்தில் உள்ள, நல் தாமரை -
நல்ல தாமரைப்பூவை, நல் அன்னம் சேர்ந்தாற்போல் - நல்ல அன்னப்
பறவை சேர்ந்தாற்போல, கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கல்வி
யுடையோரைக் கல்வி யுடையோரே விரும்பிச் (சேர்வர்); முதுகாட்டில்
- புறங்காட்டில் உள்ள, பிணம் - பிணத்தை, காக்கை
உகக்கும் - காக்கை விரும்பும்; (அதுபோல்) கற்பு இலா மூர்க்கரை
- கல்வியில்லாத மூடரை, மூர்க்கர் - மூடரே,
முகப்பர் - விரும்புவர்.
கற்றவரோடு கற்றவரும், மூடரோடு மூடரும்
நட்புச் செய்வர் எ - ம். (24) |
|
|
|
|
கரவுடையவர் ஒளிந்தே
நிற்பர |
-
25. நஞ்சுடைமை
தானறிந்து நாகங் கரந்துறையும் அஞ்சாப் புறங்கிடக்கும்
நீர்ப்பாம்பு-நெஞ்சிற் கரவுடையார் தம்மைக் கரப்பர்
கரவார் கரவிலா நெஞ்சத்
தவர்.
(பதவுரை)
நாகம் - விடப்பாம்பானது, தான் நஞ்சு உடைமை
அறிந்து - தான் விடம் உடையதாயிருத்தலை அறிந்து, கரந்து
உறையும் - மறைந்து வசிக்கும்; நீர்ப்பாம்பு -
(விடமில்லாத) தண்ணீர்ப் பாம்பானது, அஞ்சா புறம் கிடக்கும் -
அஞ்சாமல் வெளியே கிடக்கும்; (அவைபோல்) நெஞ்சில் கரவு உடையார்
- மனத்தில் வஞ்சனையை உடையவர், தம்மைக் கரப்பர் - தம்மைத்
தாமே மறைத்துக்கொள்வர்; கரவு இலா நெஞ்சத்தவர் -
வஞ்சனையில்லாத மனத்தை உடையவர், கரவார் - தம்மை
மறைத்துக்கொள்ளார்.
வஞ்சனையுடையவர் மறைந்தொழுகுவர்;
வஞ்சனையில்லாதவர் வெளிப்பட்டொழுகுவர் எ - ம்.
(25) |
|
|
|
|
-
26. மன்னனு மாசறக்
கற்றோனுஞ் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன்
சிறப்புடையன்-மன்னற்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை
கற்றோற்குச் சென்றஇட மெல்லாம்
சிறப்பு.
(பதவுரை)
மன்னனும் - அரசனையும், மாசு அறக் கற்றோனும் -
கசடறக் கற்ற புலவனையும், சீர்தூக்கின் - ஆராய்ந்து பார்த்தால்,
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - அரசனைக் காட்டிலும் புலவனே
சிறப்புடையனாவன்; மன்னற்கு - அரசனுக்கு, தன் தேசம்
அல்லால் - தன் நாட்டிலல்லாமல் (பிற நாடுகளில்), சிறப்பு
இல்லை - சிறப்பில்லையாகும்; கற்றோற்கு - புலவனுக்கோ
எனில், சென்ற இடம் எல்லாம் சிறப்பு - அவன் சென்ற எல்லா
நாடுகளிலும் சிறப்பு உண்டாகும்.
அரசனிலும் புலவனே சிறப்புடையவன் எ - ம்.
(26) |
|
|
|
|
-
27. கல்லாத
மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம் அல்லாத
மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய வாழைக்குத் தானீன்ற
காய்கூற்றங் கூற்றமே இல்லிற் கிசைந்தொழுகாப்
பெண்.
(பதவுரை) கல்லாத மாந்தர்க்கு -
கல்வியறிவில்லாத மாக்களுக்கு, கற்று உணர்ந்தார்
சொல்-கற்றறிந்தவருடைய உறுதிமொழி, கூற்றம் -
இயமனாம்; (துன்பஞ் செய்யும் என்றபடி); அல்லாத மாந்தர்க்கு -
(தருமத்தில் விருப்பமுடையர்) அல்லாத மனிதர்க்கு, அறம் - தருமமே,
கூற்றம் - இயமனாகும், மெல்லிய வாழைக்கு -
மெல்லிய வாழைமரத்துக்கு, தான் ஈன்ற காய் கூற்றம் - அஃது ஈன்ற
காயே இயமனாம்; (அதுபோல) இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண் -
இல்வாழ்க்கைக்குப் பொருந்தி நடவாத மனைவி, கூற்றம் - (கணவனுக்கு)
இயமனாவள்.
கற்றறிந்தவருடைய உறுதிமொழியினாலே
கல்லாதவருக்கும், தருமத்தினாலே பாவிகளுக்கும், பொருத்தமில்லாத மனையாளாலே கணவனுக்கும்
துன்பம் விளையும் எ - ம். (27) |
|
|
|
|
கெட்டாலும் மனவிரிவு
குறையார் |
-
28. சந்தன மென்குறடு
தான்தேய்ந்த காலத்துங் கந்தங் குறைபடா
தாதலால்-தந்தந் தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர்
கேட்டால் மனஞ்சிறிய ராவரோ மற்று.
(பதவுரை) மெல் சந்தனக் குறடு -
மென்மையாகிய சந்தனக் கட்டையானது, தான் தேய்ந்த காலத்தும் -
தான் தேய்ந்து போன காலத்திலும், கந்தம் குறைபடாது - மணம்
குறையாது; ஆதலால் - ஆதலினாலே, தார் வேந்தர்
- மாலையை அணிந்த அரசர்கள், தம்தம் தனம் சிறியர் ஆயினும் -
தங்கள் தங்கள் செல்வத்திற் குறைந்தவரானாலும், கேட்டால் -
அவ்வறுமையினாலே, மனம் சிறியர் ஆவரோ - மனஞ் சுருங்கினவராவாரோ
(ஆகார்).
தார் - சேனை;
மனம் - மன வலிமை என்று பொருள் கூறுதலும் ஆம்.
அரசர்கள் செல்வத்திற் குறைந்தாலும் மன
விரிவு (தளராத் தன்மை) குன்றார் எ - ம்.
(28) |
|
|
|
|
-
29. மருவினிய
சுற்றமும் வான்பொருளும் நல்ல உருவும் உயர்குலமு
மெல்லாம்-திருமடந்தை ஆம்போ தவளோடு மாகும்
அவள்பிரிந்து போம்போ தவளொடு
போம்.
(பதவுரை) மருவு இனிய சுற்றமும் -
தழுவிய இனிய உறவும், வான் பொருளும் - மேலாகிய பொருளும்,
நல்ல உருவும் - நல்ல அழகும், உயர்குலமும்
எல்லாம் - உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், திருமடந்தை
ஆம் போது - சீதேவி வந்து கூடும்பொழுது, அவளோடும் ஆகும்
- அவளுடனே வந்து கூடும்; அவள் பிரிந்து போம்போது - அவள்
நீங்கிப் போம்பொழுது, அவளொடு போம் - அவளுடனே நீங்கிப்
போகும்.
திருமடந்தை - இலக்குமி,
ஆகும் போகும் என்பன ஆம் போம் என்றும், பொழுது என்பது போது என்றும்
விகாரப்பட்டன.
சுற்றமும், பொருளும், அழகும், உயர்குலமும்
நிலையுடையனவல்ல எ - ம். (29) |
|
|
|
|
-
30. சாந்தனையும்
தீயனவே செய்திடினும் தாமவரை ஆந்தனையும் காப்பர்
அறிவுடையோர்-மாந்தர் குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத்
தந்து மறைக்குமாங் கண்டீர்
மரம்.
(பதவுரை) மரம் - மரங்களானவை,
மாந்தர் குறைக்கும் தனையும் - (தம்மை) மனிதர் வெட்டுமளவும்,
குளிர்நிழலைத் தந்து மறைக்கும் - (அவருக்குங்) குளிர்ச்சியாகிய
நிழலைக் கொடுத்து வெயிலை மறைக்கும் (அதுபோல), அறிவு உடையோர் -
அறிவுடையவர்; சாம்தனையும் - (தாம்) இறந்து போமளவும்,
தீயனவே செய்திடினும் - (பிறர் தமக்குத்) தீங்குகளையே
செய்தாராயினும், தாம் அவரை ஆம் தனையும் காப்பர். தாம் அவரையும்
தம்மாலே ஆகுமளவும் காப்பார்.
ஆம்: அசை. கண்டீர்:
முன்னிலையசை.
அறிவுடையவர் தமக்குத் தீங்கு செய்வோருக்கும்
நன்மையே செய்வார் எ - ம். (30)
மூதுரை மூலமும்
உரையும்முற்றிற்று.
|
|
|
|
|