31 முதல் 40 வரை
 
நல்லன நான்கு

31.  இழுக்குடைய பாட்டிற்கு இசைநன்று சாலும்
    ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று-வழுக்குடைய
    வீரத்தின் நன்று விடாநோய் பழிக்கஞ்சாத்
    தாரத்தின் நன்று தனி.

(பதவுரை) இழுக்கு உடைய பாட்டிற்கு இசை நன்று - இலக்கண வழுக்களையுடைய செய்யுளினும் (அஃதில்லாத) வழக்கு நல்லது, உயர்குலத்தின் சாலும் ஒழுக்கம் நன்று - உயர் குலத்தினும் (அஃதில்லாத) மாட்சிமைப்பட்ட ஒழுக்கம் நல்லது; வழுக்கு உடைய வீரத்தின் விடா நோய் நன்று - தவறுதலையுடைய வீரத்தினும் தீராப்பிணி நல்லது ; பழிக்கு அஞ்சாத் தாரத்தின் தனி நன்று - பழிச் சொல்லுக்கு அஞ்சாத மனைவியோடு கூடி வாழ்தலினும் தனியே இருத்தல் நல்லது.

இலக்கணப் பிழையுடைய பாட்டும், நல்லொழுக்க மில்லாத உயர்குலமும், தவறுதலடையும் வீரமும், கற்பில்லாத மனைவியோடு கூடிய இல்வாழ்க்கையும் தீரா வசையை விளைவிக்கும் எ - ம். இசை - உலக வழக்காகிய சொற்றொடர். (31)

   
செல்வநிலையாமையறிந்து உதவுக

32.  ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
    மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர்-சோறிடுந்
    தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
    உண்ணீர்மை வீறும் உயர்ந்து.

(பதவுரை) மா நிலத்தீர் - பெரிய பூமியுலுள்ளவர்களே, ஆறு இடும் மேடும் மடுவும் போல் - ஆற்று வெள்ளத்தினால் உண்டாக்கப்படும் மேடும் பள்ளமும்போல. செல்வம் ஏறிடும் மாறிடும்-செல்வம் வளர்வதும் தேய்வதுமாய் இருக்கும்; (ஆதலினால்) சோறு இடும் - (இரப்பவருக்கு உண்ண) அன்னத்தை இடுங்கள்; தண்ணீரும் வாரும் - (பருகுதற்கு நல்ல) தண்ணீரையும் வாருங்கள்; தருமமே சார்பு ஆக - (இப்படிச் செய்து வருவீர்களானால்) இந்தத் தருமமே துணையாக, உள்நீர்மை உயர்ந்து வீறும்-உள்ளத்திலே தூயதன்மை ஓங்கி விளங்கும். ஆம்: அசை.

நிலையில்லாத செல்வம் உள்ளபொழுதே இரப்பவர்களுக்குச் சோறும் தண்ணீரும் அளித்தால் மனம் தூய்மையுற்று விளங்கும் எ - ம். (32)

   
வன்சொல்லும் இன்சொல்லும்

33.  வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் வேழத்தில்
    பட்டுருவுங் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
    பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
    வேருக்கு நெக்கு விடும்.

(பதவுரை) வேழத்தில்பட்டு உருவும் கோல் பஞ்சில் பாயாது - (வலிய) யானையின் மேலே பட்டுருவும் அம்பானது (மெல்லிய) பஞ்சின்மேலே பாயாது; நெடு இருப்புப்பாரைக்கு நெக்கு விடாப்பாறை - நெடுமையாகிய இருப்புப் பாரைக்குப் பிளவாத கருங்கற் பாறையானது, பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும் பச்சை மரத்தின் வேருக்குப் பிளந்துபோம்; (அவ்வாறே) வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம் - வன்சொற்கள் இன்சொற்களை வெல்ல மாட்டாவாகும்; (இன் சொற்களே வெல்லும்)

வன் சொல் தோற்கும்; இன்சொல் செல்லும் எ - ம். (33)

   
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை

34.  கல்லானே யானாலுங் கைப்பொருளொன் றுண்டாயின்
    எல்லாருஞ் சென்றங்கு எதிர்கொள்வர்-இல்லானை
    இல்லாளும் வேண்டாள்மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள்
    செல்லாது அவன்வாயிற் சொல்.

(பதவுரை) கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின் - (ஒருவன்) படியாதவனேயாயினும் (அவன்) கையிலே பொருள் மாத்திரம் இருந்தால், எல்லோரும் சென்று எதிர்கொள்வர் - (அவனை) யாவரும் போய் எதிர்கொண்டு உபசரிப்பர்; இல்லானை இல்லாளும் வேண்டாள் - (படித்தவனே யாயினும் பொருளே) இல்லாதவனை (அவன்) மனைவியும் விரும்பாள்; ஈன்று எடுத்த தாய் வேண்டாள் - (அவனைப்) பெற்று வளர்த்த அன்னையும் விரும்பாள் ; அவன் வாயில் சொல் செல்லாது - அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படாது. அங்கு, மற்று: அசை.

கல்லாதவனே யாயினும் பொருளுடையவனை. எல்லாரும் மதிப்பர்; கற்றவனே யாயினும் பொருளில்லாதவனை ஒருவரும் மதியார் எ - ம். (34)

   
உரைப்பினும் பேதை உணரான்

35.  பூவாதே காய்க்கும் மரமுமுள மக்களுளும்
    ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே-தூவா
    விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
    உரைத்தாலுந் தோன்றா துணர்வு.

(பதவுரை) பூவாதே காய்க்கும் மரமும் உள - பூவாமலே காய்க்கின்ற மரங்களும் உண்டு; (அதுபோல) மக்களுளும்ஏவாதே நின்று தாம் உணர்வார் உளர் - மனிதர்களுள்ளும், ஏவாமலே இருந்து தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு ; தூவா விரைத்தாலும் நன்று ஆகா வித்து என - தூவி விரைத்தாலும் முளைத்துப் பயன்படாத விதைபோல, பேதைக்கு உரைத்தாலும் உணர்வு தோன்றாது-மூடனுக்கு (எடுத்து விளங்கச்) சொன்னாலும் (அதனை அறியும்) அறிவு (அவனிடத்து) உண்டாகாது.

குறிப்பறிந்து செய்வாரே அறிவுடையோர் ; அறிவிக்கவும் அறிந்து செய்யாதவர் மூடர்  எ - ம். (35)

   
பிறர்மனை விரும்பாமை

36.  நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
    கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல்-ஒண்டொடீ
    போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
    மாதர்மேல் வைப்பார் மனம்.

(பதவுரை) ஒள் தொடீ - ஒள்ளிய வளையலை அணிந்தவளே, நண்டு சிப்பி வேய் கதலி-நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் ; நாசம் உறும் காலத்தில் - தாம் அழிவை அடையுங் காலத்திலே ; கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் - (முறையே தாம்) கொண்ட (குஞ்சும் முத்தும் அரிசியும் காய்க்குலையும் ஆகிய) கருக்களை ஈனுந்தன்மைபோல, (மனிதர்கள்) போதம் தனம் கல்வி பொன்ற வரும் காலம்-ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் - பிறமகளிர் மேல் மனம் வைப்பார்கள்.

ஒருவன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிக்கின், அஃது அவனிடத்துள்ள ஞானம் செல்வம் கல்வி என்னும் மூன்றுங் கெடுதற்கு அறிகுறியாகும் எ - ம். (36)

   
வீடடைவார்க்கு விதியில்லை

37.  வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்
    அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதெனக்
    கண்ணுறுவது அல்லால் கவலைப்படேல் நெஞ்சேமெய்
    விண்ணுறுவார்க் கில்லை விதி.

(பதவுரை) வினைப்பயனை வெல்வதற்கு - இருவினைப் பயனை வெல்வதற்கு (உபாயம்), வேதமுதலாம் அனைத்து ஆயநூல் அகத்தும் இல்லை - வேத முதலாகிய எல்லா நூல்களையும் கற்பதன் கண்ணும் இல்லை, (எனினும்) நெஞ்சே - மனமே, கவலைப்படேல் - கவலையுறாதே, மெய் விண் உறுவார்க்கு - மெய்யாகிய வீட்டு நெறியில் நிற்பவர்க்கு, நினைப்பது எனக் கண்உறுவது அல்லால் - (அவர்) நினைப்பதுபோலத் தோன்றுவது அல்லாமல், விதி இல்லை-ஊழ் இல்லையாம்.

முத்தி நெறியாகிய தியான சமாதிகளினாலன்றி நூல்களைக் கற்றலினால் வினையைக் கடக்க வொண்ணாது எ - ம்.

விண் - பரவெளியும் ஆம் ; இப்பாட்டிற்கு வேறு வகையாகப் பொருள் கூறுவாரும் உளர். (37)

   
இறைவனுடன் இரண்டற்று நில்

38  நன்றென்றும் தீதென்றும் நானென்றும் தானென்றும்
    அன்றென்றும் ஆமென்றும் ஆகாதே-நின்றநிலை
    தானதாந் தத்துவமாஞ் சம்பறுத்தார் யாக்கைக்குப்
    போனவா தேடும் பொருள்.

(பதவுரை) நன்று என்றும் - (இது) நல்லது என்றும், தீது என்றும் - (இது) தீயது என்றும், நான் என்றும் - (இது செய்தவன்) நான் என்றும், தான் என்றும் - (இது செய்தவன்) அவன் என்றும், அன்று என்றும்-(இது) அன்று என்றும், ஆம் என்றும்-(இது) ஆகும் என்றும், ஆகாதே நின்ற நிலை - பேதஞ் செய்யாமல் (இரண்டறக்கலந்து) நின்ற நிலையே, தான் அது ஆம் தத்துவம் ஆம் - ஆன்மாவாகிய தான் (பதியாகிய) அதுவாகுகின்ற உண்மை நிலையாகும் ; தேடும் பொருள் - தன்னின் வேறாக மெய்ப்பொருளாகிய கடவுளைத் தேடுவது, சம்பு அறுத்தார் யாக்கைக்குப் போனவா - சம்பை அறுத்தவர் (அதனைக் கட்டுதற்கு அதுவே அமையுமென்று அறியாமல்) கயிறு தேடிப் போனது போலும்.

உயிரினுள்ளே கடவுளைக் கண்டு அதனோடு பேதமின்றிக் கலந்து நிற்கும் நிலையே உண்மை நிலை எ - ம். சம்பு-ஓர் வகைப் புல். (38)

   
முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி

39.  முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
    தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
    கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
    முலையளவே ஆகுமாம் மூப்பு.

(பதவுரை) முப்பது ஆம் ஆண்டு அளவில் - முப்பது வயதினளவிலே, மூன்று அற்று-முக்குற்றமும் ஒழியப்பெற்று, ஒரு பொருளை - கேவலப்பொருளாகிய கடவுளை, தப்பாமல் தன்னுள் பெறான் ஆயின் - (ஒருவன்) தவறாமல் தன்னுள்ளே (அனுபவ உணர்வால்) அடையானாயின், காரிகையார் தங்கள் மூப்பு முலை அளவே ஆகுமாம் - அழகிய மாதர்கள் முதுமையில் (பதியுடன் கூடி இன்பம் நுகர்தலின்றி) முலையினை யுடையராதல் மாத்திரமே போல, செப்பும் கலை அளவே ஆகும்-(அவன் முதுமையில் பதியுடன் கூடி இன்பம் நுகரப் பெறாமல்) கற்கும் கல்வியை உடையவனாதல் மாத்திரமே ஆவன்.

மூப்பு வருவதற்குள்ளே முக்குற்றமற்று மெய்ப்பொருளையடைந்தின்புற முயலல் வேணடும் எ - ம். முக்குற்றம் காம வெகுளி மயக்கங்கள். ஆணவம் கன்மம் மாயை ஆகிய பாசம் மூன்றும் என்னலும் ஆம். இப்பாட்டிற்கு யாம் கூறிய பொருளே பொருத்தமுடைத்தாலை ஓர்ந்துணர்க. (39)

   
ஒத்த கருத்தமை ஒண்தமிழ் நூல்கள்

40.  தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
    மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
    திருவா சகமும் திருமூலர் சொல்லும்
    ஒருவா சகமென் றுணர்.

(பதவுரை) தேவர் குறளும் - திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திரு நான்மறை முடிவும் - சிறப்புப் பொருந்தியநான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களும், மூவர் தமிழும்-(திருஞான சம்பந்தமூர்த்திநாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சமயகுரவர்) மூவர்களுடைய (தேவாரமாகிய) தமிழ் வேதமும், முனிமொழியும் - வாதவூர் முனிவராகிய மாணிக்கவாசகர் மொழிந்தருளிய, கோவை திருவாசகமும் - திருக்கோவையார் திருவாசகங்களும், திருமூலர் சொல்லும் - திருமூல நாயனாருடைய திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் - ஒரு பொருளையே குறிப்பனவென்று அறிவாயாக.

திருக்குறள் முதலிய இவையெல்லாம் பொருண் முடிவு வேறு படாத மெய்ந்நூல்கள் எ - ம். 'முனிமொழியும்' என்பதற்கு 'வியாச முனிவருடைய வேதாந்த சூத்திரம், என்றும் பொருள் கூறுவர். (40)

                நல்வழி மூலமும் உரையும்முற்றிற்று