25. மச்சேந்திர நாதர் என்ற நொண்டிச் சித்தர் பாடல் நொண்டிச் சித்தரின் உண்மைப் பெயர் தெரியவில்லை. ஊரும் தெரியவில்லை. காலமும் தெளிவாகப் புலப்பட வில்லை. சங்க காலத்தில் ஐயூர் முடவனார் போல் இவரும் கால் ஊனம் உற்றவர் போலும். எனவே காரணப் பெயராகவே நொண்டிச் சித்தர் என்று அழைத்தனர் போலும். ஆனால் பாடல்கள் எவையும் கால் முறிந்த சிந்தனையாகத் தெரியவில்லை. எல்லாம் முழு நிறை மாந்த வடிவத்தின் நெடிய சிந்தனையையே கொடுமுடியாய்க் கொண்டுள்ளன. நொண்டிச் சித்தர் சக்தி உபாசகர். தம் பாட்டிலேயே தாம் நொண்டி என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆங்காரமும் ஒழிந்தேன் - உண்மைநிலை அறிந்திடும் நொண்டி எனச் சிறந்திழித்தேன் பாங்காம் நிலை தெரிந்தேன் - குரு சொன்ன பரபிரம்ம சொரூபத்தின் தெளிவறிந்தேன் என்கிறார். சக்தி வழிபாட்டிற்கே உரிய நெறிமுறைகள், வழி முறைகள் இவர் பாடல்களில் பாலும் நிறமும் போலப் பிணைந்துள்ளன. இவர் திருமூலரின் சக்தி வழிபாட்டிலும், நந்தீசர் என்ற சித்தரின் நெறியிலும் செல்பவர் என்பது இவர் பாடல்களில் அங்கும் இங்குமாகப் பற்பல குறிப்புகளால் காணப்படுகின்றன. |