விடுத்துநின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய் அடுத்துநின்று அறிமினோ அனாதிநின்ற ஆதியே. | 320 |
| | |
உதித்தமந் திரத்தினும் ஒடுங்குமக் கரத்தினும் மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின் சிரித்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. | 321 |
| | |
திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர் குருக்கொடுக்கும் பித்தரே கொண்டு நீந்த வல்லிரோ குருக்கொடுக்கும் பித்தரும் குருக்கொள் வந்தசீடனும் பருத்திட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. | 322 |
| | |
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும் மேருவுங் கடந்தஅண்ட கோளமுங் கடந்துபோய் எழுத்தெலாம் அறிந்துவிட்ட இந்திரஞால வெளியிலே யானுநீயு மேகலந்த தென்ன தொன்மை ஈசனே. | 323 |
| | |
ஓம்நமோ என்றுளே பாவையென்று அறிந்தபின் பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின் நானுநீயும் உண்டடா நலங்குலம் அதுண்டடா ஊனுமூணும் ஒன்றுமே உணந்திடாய் எனக்குளே. | 324 |
| | |
ஐம்புலனை வென்றவர்க்கு அன்னதானம் ஈவதால் நம்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ ஐம்புலனை வென்றிடா தவத்தமே உழன்றிடும் வம்பருக்கும் ஈவதுங் கொடுப்பதும் அவத்தமே. | 325 |
| | |
ஆணியான ஐம்புலன்கள் அவையுமொக்குள் ஒக்குமோ யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ வீணர்காள் பிதற்றுவீர் மெய்ம்மையே உணர்திரேல் ஊணுறக்க போகமும் உமக் கெனக்கும் ஒக்குமே. | 326 |
| | |
ஓடுகின்ற ஐம்புலன் ஒடுங்கஅஞ் செழுத்துளே நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள் கூடுகின்ற கண்டித குணங்கள் மூன் றெழுத்துளே ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே. | 327 |