சூதர் விமானம்
நீலம், இன்பம், நித்திய அமைதி
நீடும் வான் வெளியில்,
கோலம், புகழ்மை, நட்பாம் விண்மீன்
கூடும் வான் வெளியில்,
சீலம் இழந்தே போர்வெறி கொண்டு
சென்ற விமானம் நீ,
காலம் வெறுக்க வீழ்ந்தாய்! மாந்தர்
கண்டு நகைத்திடவே!
‘வாழ்வோம் அன்பால்’ என்றே மின்னல்
வரையும் வான் வெளியில்,
‘சூழ்வோம் நட்பால்’ என்றே விண்மீன்
சுடரும் வான் வெளியில்,
பாழ்வாய் கொண்டே சென்றாய்! எற்றிப்
பறக்கும் விமானம் நீ
வீழ்ந்தாய் வீரர் காலில் நீயே!
வேறென செய்வாயே?
மேதை ‘லெனின்’ பேர் வான்வில் என்றே
மின்னும் வான் வெளியில்,
தாதை ‘கார்க்கி’ நெஞ்சப் பறவை
தவழும் வான் வெளியில்
போதை மிகுந்தே சென்றாய்! சற்றைப்
போழ்தில், வீழ்ந்தாய் நீ!
‘பேதை பேதை’ என்றே வையம்
பின்னும் நகைத்திடவே!
|