வாழ்க, காமராஜர்!
ஒப்பற்ற காமராசர் பிறந்தார் - நம்
உள்ளந்தனில் நிறைந்து சிறந்தார்!
தப்பற்ற வழியிலே நடந்தார் - அவர்
தடைகள் பலவற்றையுங் கடந்தார்!
காங்கிரஸ் எனும்வண்டியை ஓட்டி - அதைக்
காப்பதிலே தன்திறமை காட்டி,
தீங்கினை எதிர்த்துநின்று வென்றார் - அவர்
தேசமக்கள் செல்லும்நெறி சென்றார்!
கற்றவர் பலர்இருந்த போதும் - உண்மை
கற்றவர் அருகிவிட்ட நேரம்!
பற்றெதும் இன்றிஅரசில் நுழைந்தார் - மக்கட்
பரம்பரையை உயர்த்த விழைந்தார்!
சூரர்பலர் உள்ளஇந்த நாடு - சிந்தை
சுத்தமானவர் எவர்நீ தேடு!
தீரமாய் ஒருவர்வந்து நின்றார் - தேசச்
செல்வங்கள் மக்கள்உடைமை என்றார்!
சாத்திரங் கற்றவர் நூறுநூறு - ஆனால்
தன்னல மற்றவர் யாருகூறு!
பாத்திரம் அறியும் நெறிகற்றார் - நம்
பாரதத் தலைமைதனைப் பெற்றார்!
கல்வியும் உணவும்தந்து காத்தார் - மக்கள்
கண்களைத் திறந்துநன்மை சேர்த்தார்!
வல்விதி அறுந்துவிழல் ஆச்சு - மக்கள்
வாழ்வினை உயர்த்தும்அவர் மூச்சு!
ஏங்கியே அழுதகண்ணீர் ஓடி - நாட்டின்
இன்னலை உரைத்தகதை கோடி!
தூங்கினார் பலர்அப்போது வீணாய் - அன்று
தொண்டரானார் காமராசர் காணாய்!
திட்டமிட்டு வாழ்ந்திடவே வேணும் - ஒரு
தெய்வம்நமைக் காத்திடவே வேணும்!
கொட்டியே முரசொலிக்க வேணும் - திடங்
கொண்டுகாம ராசர்வாழ வேணும்!
‘தமிழ் சினிமா’ - 1964
|