பக்கம் எண் :

118தமிழ்ஒளி கவிதைகள்2

சோவியத் அன்னை

சுமந்து பெறாமல்என் இதயந் தனிற்பால்
சுரந்தவள் சோவியத் அன்னை!
அமைந்தஎன் வாழ்க்கையில் உணர்ச்சிப் பெரும்பொருள்
ஆக இலங்கிய அன்னை!

எந்நிற மாயினும் தந்நிற மாகவே
ஏற்றுக்கொள் கின்றதோர் உள்ளம்!
ஏழையின் இன்னலை வேருடன் வீழ்த்தவே
எழுந்த பெருங்கடல் வெள்ளம்!

செந்நிற மாகிப் பறக்கின்ற கொடியைச்
சேர்த்தொரு வையகம் செய்தாள்!
செல்வ மெலாம்பொது வுடைமை யென்றாக்கிய
தெய்விக வாழ்வினைப் பெய்தாள்!

மேற்கு கிழக்கெனும் கைகள் இணைத்தவள்
மேதினி மேற்புகழ் பெற்றாள்!
மேவிய தெற்கும் வடக்கும்தன் கண்ணொளி
மின்னிடப் புன்னகை யுற்றாள்!

நாற்றிசை யும்அவள் நல்லருள் பாய்ந்திடும்
நற்சுட ராகியே சூழ்வோம்!
நாடுகள் யாவும்நல் வீடுக ளாகிடும்
நாமவள் மக்களாய் வாழ்வோம்!

‘சோவியத் நாடு’ - 1966

குறிப்பு : 1964 எழுதப்பட்ட இக்கவிதை - கவிஞர் மறைவுக்குப் பின்னர்
வெளியிடப்பட்டது.