பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 119

மேதின ரோஜா

செக்கர் எனஒளி சிந்திச் சிரித்தது;
தியாகக் கனல்எனப் பூத்து மிளிர்ந்தது;
சொக்கும் அழகொடு சோகம் கலந்திடத்
தொட்டியில் ரோஜா நறுமலர் பூத்தது!
அக்கணம் காற்றில் மிதந்த நறுமணம்
அன்பை உணர்ச்சியைத் தியாகச் சரிதையைத்
திக்கில் இறைக்கவும் சிந்தை கரைந்தது;
சிந்தனை மேதினம் வந்ததென் றார்த்தது!

நீதி பரப்ப நெடும்புவி யெங்கணும்
நேர்மைக் குழைத்தவர் பேரைச் சுமந்துமே
மேதினம் வந்துநற் கீத மிசைத்தது!
வெற்றி முழக்கொலி விண்ணை யிடித்தது!
ஆதி இயற்கை அவள்முகம் பூத்தது
ஆயினும் சின்னஞ் சிறுமலர் சோர்ந்தது
சோதி பரப்பிய மெல்லிதழ் வீழ்ந்தது
துக்கமென் நெஞ்சையும் முள்ளெனத் தைத்தது!

காதல் நறுமணம் அள்ளித் தெளித்திடும்
கண்கவர் மென்மலர் நெஞ்சத் துடிப்பதோ?
வேதனை நெஞ்சொடு வெந்து குமைந்தது,
வெற்றிக் களிப்பினில் வெம்மை கலந்தது!
நாத மெனஅவன் நாம மொலித்தது;
நண்பன் அளித்திட்ட நற்செடி பூத்தது!
சேத மடைந்த குழல்என அன்னவன்
ஜீவன் மறைந்தபின் மேதினம் வந்தது!

அன்றொரு நாள்என-தாருயிர் நண்பனும்
அன்பொடு தந்து வளர்த்த நறுஞ்செடி 
இன்றைக்கு ‘மேதினம்’ என்று மலர்ந்தது!
எண்ணமெனும் இதழ் சோர்ந்து துடித்தது!
இன்றவன் பேரில் இருந்திடு சொத்தெலாம்
இன்புறு ரோஜா நறுஞ்செடி ஒன்றுதான்!
இன்றவன் பேரை உரைத்திட நிற்பதும்
இன்புறு ரோஜா நறுமலர் ஒன்றுதான்!