பக்கம் எண் :

22தமிழ்ஒளி கவிதைகள்2

நீ யார் பக்கம்?

குடிசையில்:

நள்ளிரவு நகர்ப்புறத்துக் கடிகா ரத்தில் 
       நாவசைத்து மணியோசை அலறும் போது
உள்ளமிக நடுக்குற்றாள் ஏழை நங்கை 
       உயிர்உருக்கும் ஆலையிலே உணவு மின்றித்
தள்ளாடும் உடலுடையான் கணவன், காய்ச்சல் 
       தன்னோடு வேலைசெயச் சென்றான், அந்தோ!
உள்ளாடும் எலும்புடலில் உறுதி யில்லான் 
       ஒளிகுன்றும் இரவினிலே என்ன செய்வான்?

உயிர்களெலாம் விழிமூடித் தூங்கும் நேரம் 
       ஒருகவளம் சோற்றுக்காய் மனிதன் இங்கு
வயிறொட்ட ஆலையிலே உழைத்து நாளும் 
       வாடுகிறான்; கொடுமைக்கோர் எல்லை யுண்டோ?
வெயில்வந்து படுக்கையிலே வீழ்வதைப் போல் 
       வேதனையை அடைந்தவளாய், கணவன் எய்தும்
துயர்நிலையை எண்ணியுமே கண்ணீர் விட்டுத் 
       துடிப்புற்றுக் கிடந்திட்டாள் கிழிந்த பாயில்!

“மூடிவைத்த நொய்கஞ்சி அவனுக் காக 
       மொந்தையிலே கிடக்கிறது! கால மெல்லாம்
தேடிவைத்த பழஞ்சொத்து குடிசை வீடு; 
       திரட்டிவைத்த செல்வமெலாம் பழய கஞ்சி!
ஓடிவிட்ட நாட்களிலே என்ன இன்பம்? 
       ஒன்றுமிலை - இப்போதும் துன்பத் தாலே
வாடிவிட்ட பயிரானோம்! நாளும் எம்மை 
       மரணநிழல் தொடர்கிறது பசிரூ பத்தில்!

நோய்நொடிகள் வந்துவிடில் காப்ப தற்கு 
       நுனிப்புல்லின் அளவேனும் உதவி யுண்டா?
பேய்போன்ற முதலாளி கொடிய பாவி 
       பெருங்குருடன் - விடுமுறையும் அளிக்க மாட்டான்
வாய்செத்த ஏழைகளை வாட்டு கின்றான் 
       வறுமையிலே புழுவானோம், என்ன செய்வோம்
தேய்கின்றோம்” எனப்பலவும் எண்ணி எண்ணித் 
       தேம்பிவிழி நீர்சொரிந்து கண்ண யர்ந்தாள்!