தூண்டி விட்டது யார்?
கஞ்சிக்கும் வழியின்றிக் கெஞ்சிப் பார்த்து
கண்ணீரை வெள்ளம்போல் சிந்திப் பார்த்து
நெஞ்சினிலே நீர்வரளக் கேட்டுப் பார்த்து
நீதிவழி நேராக நடந்து பார்த்து
பஞ்சத்தை வறுமையினைத் தாங்கிப் பார்த்து
படமுடியாத் துன்பமெலாம் பட்டுப் பார்த்து
பஞ்சையராய், நகர்சுத்தி செய்து நாட்டுப்
பணிசெய்யுந் தொழிலாளர் களைத்துப் போனார்!
காங்கிரசின் மந்திரிமார் தமது வீட்டுக்
கார் செலவும் பிறசெலவும் கணக்குப் பார்த்துப்
பாங்கியிலே பணம்போட, நிலங்கள் வாங்க,
பரம்பரையாய்ச் சுகந்தேட எண்ணங் கொண்டு
மாங்குயில்வந் திருக்கின்ற சோலை சூழும்
மாளிகையும் உடன்சேர்த்து மும்ம டங்காய்
வாங்குகிறார் சம்பளங்கள்! தமது தொண்டால்
‘வந்த பெரும் போகம்’ என நினைத்தார் போலும்!
வாந்திவரும் சாக்கடையின் துர்நாற் றத்தில்
மலம்அள்ளிப் புழுநிறைந்த குப்பை வாரி
காந்தியைப்போல் பொறுமையினைக் கடைப்பி டித்து
கடமையெண்ணித் தேசத்தின் நலத்தைக் காக்கும்
சாந்தமிகும் நண்பர்க்குக் கொடுக்குங் கூலி
சரியாகப் பனிரெண்டு ரூபா யாகும்!
காந்தமெனப் பொருள்விலைகள் வேக மாகக்
கடும்விஷம்போல் ஏறியதை அறியா ருண்டோ?
கால்வயிறு சாப்பிடவும் போதாக் கூலி
கண்ணெதிரே வறுமையிடும் கோரக் கூத்து
நூல்போன்ற இளைத்தவுடல் மனைவி மக்கள்!
நோய்கொண்ட பெற்றோர்கள்! இளங்குழந்தை
பால்இன்றி அழும்ஓசை! ஐயோ, இந்தப்
பஞ்சையர்க்குத் துயரொன்றே வாழ்க்கை யாச்சு!
சால் வயிற்று முதலாளி வாழ்கின் றானே
தன்கையால் சிறுதுரும்பை அசைத்திட் டானா?
|