கேளடி காதலி !
யாரடி காதலி கேளடி - உன்றன்
ஆசைக் குரியவன் சொல்கிறேன்
பாரடி மானிடச் சாதியை - அவர்
பட்டிடுந் துன்பத்தைப் பாரடி!
மாரடித் தேழைகள் மாய்கிறார் - சிலர்
மஞ்சத்தில் உண்டுமே சாய்கிறார்
தேரடி பட்டிடுந் தூளென - தொழில்
செய்பவர் நாளும் துடிக்கிறார்!
அந்தி சிரித்திடும் போதிலே - உன்றன்
ஆசை பிறந்திடும் ஆயினும்
சந்தியில் வீதியின் ஓரத்தில் - ஒரு
சாக்கடையின் புழுப் போலவே
நொந்து நெளிந்திடும் ஏழைகள் - எனை
நோக்கி அழுதனர் காணடி!
எந்தவிதம் இதைச் சொல்லுவேன் - அடி
எவ்விதம் துன்பத்தை ஆற்றுவேன்?
முத்தெனவே ஓளி சிந்திடும் - கொடி
முல்லையை யொத்த சிரிப்பினால்
எத்தனை ஜாலங்கள் காட்டுவாய்! - அதை
எண்ணி மயங்கிடும் போதிலே
தொத்துப் பிணிகொண்ட ஏழைகள் - படுந்
துன்ப அழுகுரல் காதிலே
குத்தலெடுக்குது தோழியே - துயர்க்
கொண்ட தென்னுள்ளமென் செய்குவேன்?
என்முகம் கண்டு நீ ஆடவும் - என்றன்
இன்பக் கவிதையைப் பாடவும்
பொன்மயிலே நீயும் ஏங்கினாய் - எனும்
போதினிலே ஒன்று கேளடி!
கன்னத்தில் நீர்வழிந்தோடிட - சில
காசுக்கு மாடாய் உழைத்திடும்
என்னருஞ் சோதரர் ஆலையில் - துயர்
எய்திடும் கூக்குரல் கேட்கிறேன்!
|