பக்கம் எண் :

38தமிழ்ஒளி கவிதைகள்2

‘நான்கிங்’ எல்லையில்

சீனம் கிடுகிடென்றாடுது - புதுச் 
       செய்தியை வையகம் கேட்குது
போன யுகத்துப் பழமைகள் - பொடு 
       பொட்டென வீழ்ந்து நொறுங்குது!
வானம் இடித்த இடியென - புயல் 
       வாரி அடிக்கும் கடல் என
சீனம் அதிர செஞ்சேனையும் - பகைச் 
       சிந்தை நடுங்கமுன் னேறுது!

‘டாலர்’ மதிப்பு மண்ணாகுது - பணச் 
       சந்தை அமெரிக்கச் செல்வர்கள்
ஓல மிடுங்குரல் கேட்குது - தலை 
       ஓடு பிதுங்க விழிக்கிறார்!
காலம் இவ்வாறு முடிந்ததே - எனக் 
       காதகன் ‘சியாங்’கும் அழுகிறான்!
கோல மனைவி, தன் கூந்தலில் - எரி 
       கொள்ளும் கனவுகள் காண்கிறாள்!

ஊன்உடல் போற்றிய ‘உத்தமன்!’ - மக்கள் 
       உள்ளம் உடைந்து மடிகையில்
தேன்மது வுண்டு சிரித்தவன் - அவன் 
       ‘சியாங்’கெனும் பேர்கொண்ட ராட்சசன்!
நான்கிங் தலைநகர் தன்னிலே - அந்த 
       நாகத்தைப் பற்றி உயிருடன்
கூன்மு தலாளியை ஏத்திடும் - கொலைக் 
       கூண்டில் நிறுத்திடப் போகிறார்!

சீனம் நமக்கொரு நம்பிக்கை - அதன் 
       செஞ்சேனை வெற்றிக ளால், புது
ஞானம் பிறக்குது மண்ணிலே - இந்த
       ஞானத்தை அன்று விதைத்தது!
வானர சாகிய சோவியத் - அது 
       வாழ்த்தி மகிழுது தாயென!
ஈனர்கள் ஓட்டம் பிடிக்கிறார் - நான்கிங் 
       எல்லை பரிசுத்தம் ஆகுது!