பக்கம் எண் :

40தமிழ்ஒளி கவிதைகள்2

பொங்கல் நினைவு

நீண்டவழி நடந்திட்ட களைப்பி னாலும்
       நீளிரவின் அணைப்பாலும் உறங்கி விட்டேன்!
வேண்டுகிற இன்பமெலாம் அளிக்கும் தெய்வம் 
       வீணைமொழி மனைவியவள் என்முன் தோன்றி,
ஆண்டைவந்து தானியத்தை அள்ளு கின்றார்; 
       அங்கிருந்த நெற்கதிரை எடுக்கப் போனேன்
“தீண்டாதே பறைநாயே, என்று சொல்லித் 
       திட்டியெனைத் துரத்துகிறார்” என்று சொன்னாள்!

தடதடென என்மகனும் ஓடிவந்து 
       “தைப் பொங்கல் வருகிறது, பொங்க லிட்டுச்
சுடச்சுட நாம் சாப்பிட்டால் இனிக்கும்” என்றான். 
       சுட்டிப்பெண் என்மகளும் அந்நே ரத்தில்
கடலைப்போல் ஆர்ப்பரித்தே ஓடி வந்து 
       “களத்தினிலே நெல்லெல்லாம் தீர்ந்து போச்சு;
படைப்பதற்குப் பொங்கலுக்குச் சிறிது மில்லை 
       பால்பொங்கல் இடுவதற்கு மண்ணா?” என்றாள்.

“பசியாறச் சாப்பிடலாம் என்று சொல்லிப் 
       பல நாளாய்ப் பிள்ளைகளும் நினைத்து வந்தார்!
ருசியான பாற்பொங்கல் இனிக்கும் என்று 
       நொடிக்குநொடி எதிர்பார்த்துத் தைமா தத்தைப்
பசிபொறுத்து வருகின்றார் நமது மக்கள் 
       பட்டினியா பொங்கலிலும்? என்று கேட்டுக்
கசிகின்ற விழியின் நீர் ஒழுக, துன்பக் 
       கதறலுடன் என் மனைவி விம்ம லானாள்!

அவருடைய விம்முதல் என் இதயந் தன்னில் 
       அனல் ஈட்டிப் பாய்ச்சிவிட இந்நாள் மட்டும்
எவன் வாழ நாமுழைத்தோம்? என்ற எண்ணம் 
       இடிபோலும் என் நெஞ்சில் முழக்கஞ் செய்யச்
சுவரையுமே பாராமல் எழுந்து, மோதி 
       சொர்ணமணிக் களம்நோக்கி ஓட லானேன்;
செவலை நிறஎருதுகள், ஏரும் என்றன் 
       தீரத்தை மெச்சுவதாய் மனஞ்சொல் லிற்று!