பதில் எங்கே?
கடலிடையே பறந்துயர்ந்த காகம் போன்றான்
கழநியிடை விட்டிலுக்குக் குறியாய் நின்று
முடமாகும் பயிரனையான்; வறுமை யென்னும்
முன்வழியில் பயணம்போய் நொண்டியானான்.
ஏழையெனும் சுமை வாழ்வைச் சுமந்து நின்றான்
இடமகன்ற வையத்தில் இடமில் லாதான்
வாழையென உழைப்பென்னும் பலனையீந்து
மரணமெனும் சூறைவரும் வழியில் நின்றான்.
சேற்றினிலே அமுதத்தை எடுத்து வந்து
செகத்துள்ளோர் பசிதீர்த்தான்; உழவன் ஆகிக்
காற்றினிலே மழையினிலே விளக்கைப் போலும்
கண்விழித்துப் பயிர்நட்டு விளைவு செய்தான்!
குத்தகைக்கு நிலம்விட்ட குபேரர் வந்தார்
கொட்டியுமே அளந்திட்டார் தானியத்தை!
வைத்த அடி இரண்டாலே புவி அளந்த
மாலைப்போல், மரக்காலால் அளந்தார் யாவும்!
வாய்திறந்து பேசவில்லை; உழவன் ஏழை!
வயிறெரிய வைக்கோலில் கண்ணீர் விட்டான்!
தேய்பிறைபோல் இவ்வாறு ஜென்மமெல்லாம்
தேய்ந்துகொடும் பிணிபட்டுத் தீயலானான்!
சுமைவாழ்வைத் தாங்கியதால் வளைந்து
போனான்!
சுட்டெரித்த பட்டினியால் கருகிப் போனான்
இமைதிறக்க முடியாமல் இளைத்துப் போனான்!
இருங்கிழவன் போலானான் முப்பதுக்குள்!
பஞ்சமெனும் தீவந்து பாய்ந்த தப்போ!
பாலையிடை நடப்பவன்போல் துடிக்கலானான்
வஞ்சகம்செய் உலகம்போல் வரண்டு! போன
வானத்தைப் பார்த்தழவும் கண்ணீர் இல்லை!
|