பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 55

சர்ச்சிலுக்கு! ....

சர்ச்சில் எனும்கிழ வா-ஒரு 
       சங்கதி சொல்லுகிறேன்
கர்வம் விடுத்திடுவாய் - சற்றே 
       காதுகொடுத்தி டுவாய்!

பாபம் புரிந்தவனே - கொடும் 
       பாதகம் செய்பவனே
தீபம் அணையுதுபார் - உன்றன் 
       செல்வ அரண்மனையில்!

காலம் முடிந்ததென்றே - தன் 
       கையில் கணக்குடனே
காலனும் வந்துவிட்டான் - உன் 
       கள்ளக் கணக்கையெடு!

உன்னுடை மாளிகையில் - பேயும் 
       ஒப்பாரி வைக்குதடா!
கன்னங்கரிய இருள் - உன்றன் 
       கண்களைத் தேடுதடா!

காலக் கடைசியடா - இது 
       காலத் திறுதியடா!
ஞாலம் விடைகொடுக்கும் - உன்னை 
       நானும் அனுப்பிவைப்பேன்!

செத்துவிட்டால் உனக்கே - ஒரு 
       சீட்டுக் கவியெழுதி‘
மெத்த வணக்கம்’ என்றே - எமன் 
       வீட்டுக் கனுப்பிடுவேன்!

போய்விடு, போய்விடு, நீ - கொலை 
       போர்த் தொழில் கொண்டவனே!
போய்விடு போய்விடு நீ - மக்கள் 
       ‘போ’வெனச் சொல்லுகிறார்!