பக்கம் எண் :

72தமிழ்ஒளி கவிதைகள்2

“ஜனசக்தி” வாராய்!

பொங்கு கடல் ஓசைநிகர் சங்கொலி முழங்க
       போதமொடு நாலுதிசை பேரிகை வழங்க,
சங்கமொடு மக்களொடு ‘ஜனசக்தி’ வாராய்,
       தாளமொடு மேளமொடு வரவேற்க வந்தோம்!

நாட்டுக்கு நல்லுண்மை நாட்ட நீ வாராய்;
       நலிவுதரும் வேற்றுமைகள் நைந்தொழிய இன்று
வீட்டுக்கோர் கொடியேற்றி விடுதலையைக் கோரி
       விண்மோதும் நாதமொடு வேகமொடு வாராய்!

பொய், புளுகுப் பத்திரிக்கை நரிக்கூட்டம் அஞ்சிப்
       புதரூடு போகஒரு சிங்கமென வாராய்;
மெய் வளர, நன்மையொடு மேன்மைபெற வாராய்
       வெற்றிபெற எம்முள்ள வேட்கை நீ வாராய்!

உழைப்போர் தம் கையுற்ற ஊன்றுகோல் வாராய்;
       உண்மைதனைக் காண்கின்ற தீபம் நீ வாராய்;
அழைப்பிதழே! அன்புரையே! அழகு மலர் ஏடே!
       ஐக்கியமே! முன்னணியே ஆதரவே வாராய்!

வான்மழைக்குக் கையேந்தி நிறைபயிர் போன்று
       வாசலில் காத்திருந்தோம் வாராயோ என்று;
தேன் மழையே! செய்தி தரும் சித்திரமே! இன்று
       செந்தமிழர் இல்லத்தில் விருந்தாக வாராய்!

வயலிடையே நின் வருகை ஆனந்தம் சேர்க்கும்
       வான்முட்டும் ஆலைகளும் வருகையெதிர் பார்க்கும்;
ஜெயங்கொண்ட மக்களணி எக்காள மூதும்
       தினமெனங்கள் வீட்டிற்கு ‘ஜனசக்தி’ வாராய்!

பஞ்சாங்கம் பார்த்தநாள் மலையேறிப் போச்சு!
       பாய்கின்ற ஜனசக்தி முழக்கமிட லாச்சு
நெஞ்சே நீ ஆனந்தக் கூத்தாடுகின்றாய்
       “நேர்வருக ஜனசக்தி பேர் வருக!” என்றே!

‘ஜனசக்தி’ - 1952