உரிமைப் பொங்கல்!
கங்குல் கிழித்துக் கதிர்எழுந் தேபுவி
கண்கள் விழிக் கையிலே - புதுப்
பொங்கல் எனும் சுடர் எங்கும் சிரித்தது
புத்தம் புதுமலராய்!
நேற்று விளைந்த கதிர்அறுத் தேமணி
நெல்லைப் பிரிக்கையிலே - வரும்
காற்றில் உழவர் சரித்திரம் வந்து
கதைகள் உரைத்திடுமே!
காற்றில் பனியில் கடுங்குளி ரில்துயர்க்
காட்டில் உழைத்த தெலாம் - பிடி
சோற்றுக் கெனஅவர் பட்டதெலாம் வந்து
சொல்லும் சரித்திரமே!
“சேற்றில் கிடந்தவர் கூற்றை நொறுக்கினர்
சீனநிலத்தில்” என - வரு
காற்றிற் கடிதம் அனுப்பினர் சீனர்கள்
வைய உழவருக்கே!
புத்தம் புதுக்குரல் பொங்குது மக்கள்
புவித்தலைமை பெறுவார் - அவர்
யுத்த வெறியர் ஒடுங்கப் புரட்சி
உலகம் சமைத்திடுவார்!
காடு கரம்புகள் கொத்தித் திருத்திக்
கழனிக ளாக்கியவர் - அவர்
வீடு சிறப்புறப் பொங்குக பொங்கல்
விளைந்திட நல்லுரிமை!
‘அலைஓசை’ - 1953
|