பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 77

பிரதிக்ஞை!

தமிழர்களின் ஆத்மா:

ஞான ரதமேறி நாலுதிசை போற்ற வந்தாய்,
ஊனமொடு நாங்களுனை ஓட்டினோம் தென்றிசைக்கு!

வந்தபோ துன்னை வரவேற்கக் கூடவில்லை,
நொந்தபோ துன்னை நொறுக்குதற்குக் கூடிவிட்டோம்!

கைநீட்டி, நீட்டிஎம் கைப்பற்ற வந்தவுனைப்
பொய்நீட்டிப் ‘போஎன்றோம்’ பொய்மைக்குக் கைகொடுத்தோம்!

வீர விளக்கேற்ற வீட்டருகே வந்திட்டாய்,
‘நேரமில்லை’ என்றுசொல்லி, நெட்டினோம் உன்கழுத்தை!

மந்திரம்போல் சொற்பெருமை வாய்ந்தகவி பாடவந்தாய்,
தந்திரமாய்ப் பேசிஉனைத் தட்டிவிட்டோம் வார்த்தைகளால்

காலத்தின் காலடியில் காலிடறி வீழ்ந்தஎமை
ஞாலத்து வீரரென நற்பெருமை சூட்டவந்தாய்!

சூட்டுகின்ற பேரைச் சுடர்மணியாய்ப் போற்றாமல்
காட்டுமலர் என்றுசொல்லிக் காற்றிலே விட்டெறிந்தோம்!

நன்மைசெய வந்தவுனை நாடு கடத்திவிட்டோம்,
இன்மை, துயர்ச்சுமையை ஏற்றிவிட்டோம் உன்முதுகில்!

உள்ளமெனும் செய்யிடையே ஊன்றவந்தாய் ஞானவிதை
கள்ளத்தால் அவ்விதையைக் காலால் மிதித்தொழித்தோம்!

தேமதுர மாய்மகர யாழ்ஒன்று மீட்டி வந்தாய்,
பாமதுரம் கொஞ்சுகின்ற பைந்தமிழைக் கூட்டிவந்தாய்!

வாசற் கதவடைத்து வாயடைத்துக் காதடைத்துத்
தேசுடைய யாழைத் தெருவில் உடைத்தெறிந்தோம்!