பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 89

சீன நாட்டிற்குப் பாரதத்தின் செய்தி

நல்லுறவே எல்லையாக
நாம் தொடர்ந்து வாழ்ந்துவர
எல்லையற்ற அன்பினால்
இணைந்ததும் - நாம்
பிணைந்ததும்,

புத்தனென்ற சோதி ஒன்று
புன்னகைத்து நம்மிருவர்
சித்தமிசை வீற்றிருந்த
சேதியும் - நம்
ஆதியும்,

மஞ்சள் நதி நீளலைகள்
மாண்புமிக்க கங்கை தன்னை
நெஞ்சினால் அணைத்துநின்ற
நேயமும் - நம்
தேயமும்,

சீர் நளந்தா என்றுரைக்கும்
செம்மைசால் கலைக்கழகம்
ஆர்வமாய் நமைப்பிணைத்த
காலமும் - நம்
சீலமும்,

பண்புயர்ந்த* கோட்டினீசைப் 
பாரதம் அனுப்பி வைக்க
நண்புயர்ந்த சீனம் ஏற்றுக்
கொண்டதும் - நாம்
கண்டதும்

குன்றுகள் குகைகளில் நம்
கொள்கைசேர் சுடர்க்கொழுந்து
நின்றெரிந்த நீள்விளக்கம்
ஆனதும் - இருள்
போனதும்,

*டாக்டர் கோட்னீஸ்