அந்தரத்தில் மேடை
அமைத்தார்!
அந்தரத்தில் மேடை அமைத்தார் - அங்கே
அனுப்பிய மின்விசையாற் செய்தி அறிவார்!
தந்திரத்தால் ஆகுவ துண்டோ? - ஞானத்
தத்துவங்கள் கற்றுத் தரும் விந்தைகளினால்
மந்திரம்போல் செய்து முடித்தார் - இம்
மண்ணுலகின் பொற்கனவை விண்ணில் வடித்தார்!
சந்திரனைப் பற்றியதன்றி - அதைத்
தாண்டுகின்ற கூண்டுகளும் ஈண்டுபுனைந்தார்!
ஆற்றல்தரும் அணுபிளந்தார் - அந்த
ஆற்றலினாற் பேரண்டங்கள் யாவும் அளந்தார்!
போற்றவரும் செயல்இணைந்தார் - இப்
பூமியொடு விண்ணுலகை ஒன்றுபிணைத்தார்!
மாற்றவரும் செயல்களம்மா - அவை
மானுடத்தின் சாதனையால் வெற்றிக்கொடியை
ஏற்றவரும் செயல்களம்மா - இவை
எண்ணஎண்ணக் களிவெள்ளம் வளருதம்மா!
‘ஜனசக்தி’ - 1959
|