பக்கம் எண் :

94தமிழ்ஒளி கவிதைகள்2

சமாதானக் குரல்

காடு கழனி விளைவதற்கும்
       களையை இன்று களைவதற்கும்
நாடுவாழத் திட்டம்போடும் நாளிலே - போர்
       நம்மைத்தள்ள வைக்கும் கொலை வாளிலே!

யந்திரங்கள் சூழ்வதற்கும்
       ஆகாயமேல் வாழ்வதற்கும்
சந்திரனை நாம்பிடிக்கும் போதிலே - போர்
       தலையெடுக்க லாமோமண் மீதிலே?

பிள்ளை, குட்டி வாழ்வதற்கும்
       பேதம்யாவும் வீழ்வதற்கும்
கொள்ளைப்போரை நாம்தடுக்க வேண்டுமே - ‘கிரெம்ளின்’
       கோபுரத்தில் ஓர்விளக்கந் தூண்டுமே!

நெற்க ளோடு கோதுமையும்
       நீண்டு நீண்டு வெண்புறாவைப்
பொற்கையால் அணைந்து மகிழ்ந்தாடுமே - போர்ப்
       பூண்டறுக்க வேண்டும்என்று பாடுமே!

அணுபிளந்து வையகத்தை
       அற்புதமாய்ச் செய்வதற்குக்
கணகணென்று முரசதிர்ந்த காட்சிபார்! - போர்க்
       கழுகிறந்து வீழ்ந்தநல்ல வீழ்ச்சிபார்! 

‘ஜனசக்தி’ - 1959