பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 99

செல்வர்களுக்கு - ஒரு கேள்வி

உனக்குமட்டும் உண்ணஉணவு கிடைக்குமோ? - ஊரில்
       உள்ளஏழை உண்டால் நெஞ்சை அடைக்குமோ?
உனக்குமட்டும் உறங்கப்பஞ்சணை மெத்தையோ? - ஊரில்
       உள்ளஏழை உறங்கக்குப்பை செத்தையோ?

உனக்குமட்டும் மாளிகை மேல் வாசமோ? - ஊரில்
       உள்ளஏழை அதிற்புகுந்தால் மோசமோ?
உனக்குமட்டும் நிலங்கள்சொந்தம் ஆகுமோ? - ஏழை
       உரிமைபெற்றால் உலகம்என்ன சாகுமோ?

உலகம்உன்றன் கைகளில்தான் உருளுமோ? - ஏழை
       உரிமைபெற்றால் இயற்கைஎன்ன மருளுமோ?
கலகம் செய்யும் ஏற்றத்தாழ்வை நீக்கடா - பேதம்
       காட்டுகின்ற முறைமையைத்தூள் ஆக்கடா!

‘ஜனசக்தி’ - 1960