பக்கம் எண் :

மலரும் உள்ளம்113

குழந்தைகள் நூல் நிலையம்

எங்களூர் மத்தியிலே - நல்ல
   எழில்மிகு சோலையுண்டு.
அங்கொரு கட்டடமாம் - அதன்
   அழகினை என்னசொல்வேன்?

சிறுவர் படிப்பதுபோல் - முன்னால்
   சிலைகள் இரண்டிருக்கும்.
"வருக, வணக்கம்" என்றே - அங்கே
   மற்றோர் சிலை அழைக்கும்.

குழந்தைகள் நூல்நிலையம் - என்று
   கொட்டை எழுத்தினிலே
அழகுடன் ஓர்பலகை - நம்
   ஆசையைத் தூண்டிவிடும்.

உள்ளே புகுந்ததுமே - காண்போர்
   உள்ளம் குளிர்ந்திடுமே.
பிள்ளைகள் அவ்விடத்தை - விட்டுப்
   பிரியவும் சம்மதியார்.